போபால்: மத்திய பிரதேசத்தில் அசுத்தமான குடிநீர் குடித்து மக்கள் உயிரிழந்த சம்பவத்தில், சொந்தக் கட்சித் தலைமையிலான மாநில அரசை பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகீரத்புரா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை கழிவுநீர், குடிநீர் குழாயில் கலந்ததால் விபரீதம் ஏற்பட்டது. இந்த அசுத்தமான நீரை குடித்ததால் சுமார் 2,800க்கும் மேற்பட்ட மக்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அரசுத் தரப்பில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், பலி எண்ணிக்கை 15 வரை இருக்கலாம் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்தன. இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உமா பாரதி, ‘இந்த சம்பவம் மாநிலத்திற்கே அவமானம் மற்றும் களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமைக்கு பெரிய சோதனை’ என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், ‘நிவாரணத் தொகையான 2 லட்சம் ரூபாய் மனித உயிருக்கு ஈடாகாது.
அதிகாரிகள் பிஸ்லேரி தண்ணீர் குடிக்கும் கலாசாரத்தில் இருக்கும்போது, மக்கள் விஷத்தன்மை கொண்ட நீரை குடிக்க நேரிட்டது பெரும் பாவம். இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று ஆவேசமாக கூறினார். உமா பாரதியின் இந்த கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து, இந்தூர் மாநகராட்சி ஆணையர் திலீப் குமார் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த முதலமைச்சர் மோகன் யாதவ், மாநிலம் முழுவதும் உள்ள 16 மாநகராட்சிகளிலும் குடிநீர் குழாய்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
