திருவனந்தபுரம்: சேவ் பாக்ஸ் ஆன்லைன் ஏல நிறுவன மோசடி தொடர்பாக இந்த நிறுவனத்தின் விளம்பர தூதரான பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மற்றும் அவரது மனைவியிடம் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சாதிக் ரஹீம். கடந்த இரு வருடங்களுக்கு முன் இவர் சேவ் பாக்ஸ் என்ற பெயரில் ஒரு ஆன்லைன் ஏல நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிறுவனம் விலை உயர்ந்த செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்து வந்தது.
ஏல விற்பனைக்கு இந்த நிறுவனம் சார்பில் ஒரு செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு கேரளா முழுவதும் விநியோகஸ்த உரிமை தருவதாக கூறி பலரிடமிருந்தும் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சாதிக் ரஹீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் விளம்பர தூதரான நடிகர் ஜெயசூர்யா மற்றும் அவரது மனைவியை அமலாக்கத்துறை கொச்சியில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து நான்கு மணி நேரம் விசாரணை நடத்தியது.
