ஐதராபாத்: கடந்த 2024 ஜூலை மாதம் போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் சிக்கி, மருத்துவ பரிசோதனையின் போது கொக்கைன் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டவர், தெலுங்கு நடிகர் அமன் பிரீத் சிங். இவர், பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாசப் டேங்க் பகுதியிலுள்ள சாச்சா நேரு பூங்கா அருகில், கடந்த 19ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிதின் சிங்கானியா, ஷ்ரானிக் சிங்வி ஆகிய தொழிலதிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 43.7 கிராம் கொக்கைன், 11.5 கிராம் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில், அமன் பிரீத் சிங் அவர்களிடம் நிரந்தர வாடிக்கையாளராக இருந்து வருவது தெரிந்தது. குறைந்தது 5 முறையாவது அவர்களிடம் போதைப்பொருள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 24ம் தேதி கைதான ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த இருவர் இதை உறுதி செய்துள்ளனர்.
மேலும், அமன் பிரீத் சிங் பல மாதங்களாக ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்ததற்கான டிஜிட்டல் ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து மாசப் டேங்க் காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக இருக்கும் அமன் பிரீத் சிங்கை கைது செய்ய ஐதராபாத் போலீஸ் மற்றும் ஈகிள் சிறப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ‘அவர் பிடிபட்ட பிறகு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்புவதா? அல்லது ஆலோசனை மையத்துக்கு அனுப்புவதா என்று முடிவு செய்யப்படும்’ என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
