முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் ரூ.3.71 கோடி மோசடி

மும்பை: மும்பை அந்தேரி மேற்கு பகுதியைச் சேர்ந்த பெண்ணை கடந்த ஆகஸ்ட் 18 முதல் அக்.13 வரை செல்போனில் தொடர்பு கொண்ட ஆசாமி, கொலாபா போலீஸ் பேசுவதாகவும், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் கூறினார். இந்த வழக்கில் டிஜிட்டல் கைது செய்துள்ளதாக மிரட்டி, வீடியோ வாயிலாக போலியாக ஒன்றிய ஏஜென்சி மற்றும் நீதிமன்ற விசாரணையிலும் பெண்ணை பங்கேற்கச் செய்தார். வழக்கை விசாரித்த போலி நீதிபதி தன்னை முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட ஆசாமி, வழக்கில் இருந்து தப்பிக்க தான் கூறும் வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறு கூறினார். மேலும் டிஜிட்டல் கைது செய்திருப்பதாக கூறி மிரட்டினார். அந்த பெண்ணும் 2 தவணைகளில் ரூ.3.75 கோடி அனுப்பினார். அதற்கு பிறகு பெண்ணுக்கு எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண், போலீசில் சென்று புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், குஜராத்தைச் சேர்ந்த ஆசாமி ஒருவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: