போர்பந்தர்: இந்தியாவின் பண்டைய கடல்சார் பெருமையை மீட்டெடுக்கும் வகையில், கடற்படையின் பாரம்பரிய தையல் நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்ட ஐஎன்எஸ்வி கவுண்டின்யா பாய்மரக் கப்பல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து ஓமனின் மஸ்கட் நோக்கி தனது முதல் பயணத்தை நேற்று தொடங்கியது. இந்தியாவின் பண்டைய கடல்வழி பாரம்பரியம், வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை மீண்டும் கொண்டுவர இந்திய கடற்படையால் ஐஎன்எஸ்வி கவுண்டின்யா பாய்மரக் கப்பல் கட்டப்பட்டது. கிபி 5ம் நூற்றாண்டின் அஜந்தா குகை ஓவியங்களில் உள்ள கப்பல் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு, முழுக்க முழுக்க பழங்கால தையல் பலகை நுட்பங்களை பயன்படுத்தி, இயற்கையான பொருட்களை கொண்டு இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலுக்கு வரலாற்று சிறப்புமிக்க இந்திய மாலுமியான கவுண்டின்யாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்ததாக பதிவு செய்யப்பட்ட முதல் இந்திய மாலுமியாக கவுண்டின்யா போற்றப்படுகிறார். இவரது கடல் பயணம் புனான் ராஜ்ஜியம் உருவாவதற்கு வழிவகுத்தது. இது தென்கிழக்கு ஆசிய நாகரிகத்தில் இந்தியாவின் ஆரம்பகால செல்வாக்கைக் குறிக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க ஐஎன்எஸ்வி கவுண்டின்யா இந்தியாவின் பழங்கால கடல்சார் பெருமையை மீட்டெடுக்கும் விதமாக நேற்று தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.
குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து ஓமன் நோக்கிய ஐஎன்எஸ்வி கவுண்டின்யாவின் முதல் பயணம், மேற்கு கடற்படைத் தளபதி துணை அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், ஓமனின் இந்திய தூதர் இசா சலே அல் ஷிபானி முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. 65 அடி நீளமுள்ள கவுண்டின்யா, 18 மாலுமிகளுடன் 1,400 கி.மீ தூரத்தைக் கடந்து, 15 நாட்கள் கடற்பயணத்திற்குப் பிறகு ஓமனின் மஸ்கட்டிற்கு சென்றடையும் என ராணுவ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
* பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘ஐஎன்எஸ்வி கவுண்டின்யா தனது முதல் பயணத்தை போர்பந்தரில் இருந்து ஓமனின் மஸ்கட்டிற்குத் தொடங்குவதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் பழங்கால தையல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இந்தக் கப்பல், இந்தியாவின் செழுமையான கடல்சார் மரபுகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த தனித்துவமான கப்பலை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வடிவமைப்பாளர்கள், கைவினைஞர்கள், கப்பல் கட்டுநர்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளைகுடா பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள நமது வரலாற்றுத் தொடர்புகளை மீண்டும் நிலைநிறுத்தும் இந்தப் பயணத்தில், கப்பல் குழுவினருக்கு பாதுகாப்பான மற்றும் மறக்கமுடியாத பயணத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள்’’ என கூறி உள்ளார்.
