வங்கதேச ஊடுருவல்காரர்களை காங். வாக்கு வங்கியாக கருதுகிறது: உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்

போர்டுவா: வங்கதேச ஊடுருவல்காரர்களை காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியாக கருதுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். அசாமின் போர்டுவாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,\\” அண்டை நாட்டைச் சேர்ந்த அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் அசாமில் இருந்து மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் அடையாளம் கண்டு அவர்களை திருப்பி அனுப்பி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும். பாஜ அரசு அனைத்து வங்கதேச ஊடுருவல்காரர்களையும் அடையாளம் கண்டு அவர்களை திருப்பி அனுப்பும்.

பிரதமர் மோடி அசாம் மக்களின் கலாச்சார அடையாளத்தை பாதுகாப்பதை உறுதி செய்தது மட்டுமல்லாமல் மாநிலத்தின் அனைத்து துறை வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார். காங்கிரஸ் இவ்வளவு காலம் ஆட்சியில் இருந்தது. அசாம் மக்களின் கலாச்சாரம், நிலம் மற்றும் அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் வங்கதேச ஊடுருவல்காரர்களை காங்கிரஸ் தனது வாக்கு வங்கியாக கருதுகிறது. ஆனால் ஊடுருவல்காரர்களுக்கு எதிரான அசாம் இயக்கத்தின் தியாகிகளின் நினைவாக அது எதுவும் செய்யவில்லை.

மத்திய மற்றும் பாஜ அரசு முயற்சிகளால் இந்த மாதம் பிரமாண்டமான நினைவிடம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. பாஜ ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகளும் ஒரு பொற்காலமாக கருதப்படும். பிரதமரான கடந்த 11 ஆண்டுகளில் 86 முறை வடக்கிழக்கு பகுதிக்கும், 36 முறை அசாமுக்கும் பிரதமர் வருகை தந்துள்ளார். ஊடுருவல்காரர்கள் இல்லாத அசாம் என்பதை உறுதிப்படுத்த பாஜவுக்கு மேலும் 5 ஆண்டுகள் கொடுங்கள். அசாமில் மட்டுமல்ல இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள அனைத்து வங்கதேச சட்டவிரோத குடியேறிகளையும் நாங்கள் அடையாளம் காண்போம்” என்றார்.

Related Stories: