சென்னை: ஒரு சங்கத்தை தொடர்ந்து நடத்துவது என்பது சவாலான விசயம் என்றும், வணிகர்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கம் சார்பில் மே 5 வணிகர்களின் உரிமை திருநாளை வணிகர் தினம் என தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டு வணிகர்களின் தியாகத்திற்கு உயர் அங்கீகாரம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறும் பெருவிழா, சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா, சங்க வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கும் நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கும் திருவிழா என முப்பெரும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது.
விழாவிற்கு சங்கத்தின் தலைவர் வி.பி.மணி தலைமை தாங்கினார். குந்தன்மல், எம்.ரவி, கலைச்செல்வம், மாகின், என்.எம்.அருண்பாலாஜி, அம்மையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எம்.காசிப்பாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தார். அறக்கட்டளை தலைவர் டி.குணசேகர் சங்க தீர்மானத்தை வாசிக்கிறார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொன்விழா மலரை வெளியீட்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது: ஒரு சங்கத்தை தொடங்குவது ஈஸியான விஷயம் தான். ஆனால், அதை தொடர்ந்து நடத்துவது என்பது சவாலான விஷயம். ஆனால், திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தை 50 ஆண்டுகள் வெற்றிகரமாக, கட்டுப்பாட்டோடு, அனைவரும் ஒற்றுமையாக நடத்தி கொண்டு இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
வணிகர்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திமுகவை அண்ணா தொடங்கிய போது கடைகள் மூலமாக தான் திராவிட இயக்கம் வளர்ந்தது. அதனால், தான் வணிகர்களுக்கும் திமுகவிற்கும் ஒரு பாசம் உண்டு. திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்திற்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த நிர்வாகிகளை அடிக்க நான் சந்தித்து பேசுகிற பழக்கம் உண்டு என்றார்.
விழாவில் கே.எஸ்.தங்கவேல் நிறுவனர் விருது-ஜமாலுதீன், வைத்தியநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஏ.மாகாலிங்கம் உழைப்பாளர் விருது-மோகன், எஸ்.சத்தியமூர்த்தி, எஸ்.கே.கிருஷ்ணசாமி பண்பாளர் விருது-எம்.முகமது ஷா நவாஸ், என்.எம்.முஸ்தபா கொடையாளர் விருது-பெஞ்சமின், டி.கணேசன் காப்பாளர் விருது- டி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
விருதுகளை நக்கீரன் கோபால், திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் வழங்கினர். விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி, பி.கே.சேகர்பாபு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
