சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் காற்றின் மாசுபாடு தரம் சற்று முன்னேறியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகரில் காற்றின் வேகம் அதிகரித்ததாலும், லேசான மழையும் பெய்ததாலும் காற்றின் தரம் சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக ெகாடுங்கையூர், பெருங்குடி மற்றும் அரும்பாக்கம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு நிலையங்களில் பெறப்பட்ட தரவுகளின்படி, நேற்று முன்தினம் காற்றின் தரக்குறியீடு அளவுக்குறியீடு 200 புள்ளிகளாக குறைந்து மிதமான பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த வாரம் காற்றின் தரக்குறியீடு 200 புள்ளிகளைத் தாண்டி மோசமான பிரிவில் இருந்ததால் மேற்கண்ட பகுதிகள் கணிசமாக மாசுபட்டன. மிதமான காற்றின் தரக் குறியீடு தற்போது ஒரு முன்னேற்றம் என்றாலும், அது இன்னும் ஆரோக்கியமானதாக கருதப்படவில்லை. ஏனென்றால் நீண்ட நேரம் பொதுமக்கள் தற்போதைய காற்றில் இருந்தால் அது சுவாசக்கோளாறுகளை உருவாக்கும் என்ற அச்சம் இருக்கிறது. குறிப்பாக நுரையீரல், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் உருவாகும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, 29 மற்றும் 31ம் தேதிக்கு இடையில் சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது. நேற்று முன்தினம் கொடுங்கையூர் பகுதியில் காற்றின் தரம் 178, பெருங்குடி 112, மற்றும் அரும்பாக்கம் 142 என பதிவானது. ஆனால் மேற்கண்ட பகுதிகளில் கடந்த 20ம் தேதி நிலையை பார்க்கும் போது முறையே 268, 216, 235 என்று காற்றின் தரம் பதிவாகியிருந்தது. ஆனால் நேற்று முன்தினம் மாலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
மேற்கண்ட இந்த முன்னேற்றத்துக்கு காரணம் என்னவென்று பார்த்தால் வடகிழக்கு காற்று சற்று வலுவடைந்ததுதான் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். டிசம்பர் 20ம் தேதி மணிக்கு 3 கிமீ வேகத்தில் குறைந்த காற்றின் வேகம் நேற்று முன்தினம் மணிக்கு 20 கிமீ ஆக அதிகரித்தது. இதன் காரணமாக காற்றின் கலந்துள்ள மாசுக்கள் கலைந்து செல்ல உதவியாக இருந்தது.
தமிழகத்தில் 29ம் தேதி முதல் 31ம் தேதிவரையில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வலுவடைந்து வரும் வடகிழக்கு காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பு ஒரு காரணம் என்றும், மேலும் இது மாசின் அளவைக் குறைக்க உதவக்கூடும் என்றும் காற்றின் தரத்தை கண்காணிக்கும் ஸ்கைமெட் வெதர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று அதிகாலை நேரத்தில் லேசான மூடுபனி அல்லது புகைமூட்டம் ஏற்படக்கூடும் என்றும், ஓரளவு மேகமூட்டம் இருக்கும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்சமாக 20-21 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் பெரும்பாலான இடங்களில் மாசு அளவு 2.5 ஆக இருந்தது.
வாகனப்புகை, கழிவுகளை எரித்தல், கட்டுமானப் பணிகள், விறகு எரித்தல், வீட்டுச் சமையல் மற்றும் வளி மண்டலத்தில் உருவாகும் இரண்டாம் நிலை ஏரோசோல்கள் ஆகியவற்றில் இருந்தும் மாசு உருவானது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக மணலி 125, மணலி கிராமம் 119, வேளச்சேரி 109, உள்ளிட்ட பிற கண்காணிப்பு நிலையங்கள் கடந்த இரண்டு வாரங்களாக மிதமான பிரிவுகளிலேயே மேற்கண்ட மாசு மற்றும் காற்றுத் தரத்தில் நீடித்து வந்தன.
ராயபுரத்தில் காற்றின் தரம் 63 ஆக பதிவாகியுள்ளது. இது திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், சிறிய அளவில் ஆரோக்கிய பிரச்னைகள் உள்ளவர்களுக்கு சிறிய பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
