சென்னை: கடந்த கால அரசியல் தெரியாமல் எவனோ எழுதித் தரும், அறிக்கையை வெளியிடும் விஜய் ஒரு தற்குறி என திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தவெக- வை ஏன் சங்கிகளின் அடிமை என்கிறோம் என்றால், எங்கே கொண்டை தெரிந்தது என்றால் தமிழகத்தில் ஏன் கொள்கை எதிரி பா.ஜ.வை திட்டவில்லை என்றீர்கள். ஆனால் பா.ஜ. ஆளும் புதுச்சேரியில் பா.ஜ. அமைச்சர்களையோ, பா.ஜ. கூட்டணி முதல்வரையோ தாக்காதபோது கொண்டை தெரிந்தது.
திருப்பரங்குன்றத்தில் நாங்கள் நீதிபதியோட முரண்பட்டு மதநல்லிணக்கம் காக்க வரும்போது, த.வெ.க. போராட வேண்டாம். குறைந்தபட்சம் கருத்துக்கூட கூறாதபோது கொண்டை வெளியே தெரிந்தது. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பின்போது, முதல்வராக இருந்த மோடி ராஜினாமா செய்யாமல் நான் எப்படி என் தொகுதிக்கும், குஜராத்துக்கும் செல்வேன் என வருந்திய வாஜ்பாயுடன் இருந்தோம்.
பில்கிஸ்பானுவை 11 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்தார்கள். அவர்களின் விடுதலையை மாலை போட்டு கொண்டாடிய சங்கிகளின் பிடிகளில் நீங்கள் இருக்கிறீர்கள். உன் வீட்டு முன்பு ஒரு நாள் முழுவதும் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்த சகோதரி அஜிதா ஆக்னல்லினை ஒரு வார்த்தை கூட விசாரிக்காது துரத்தி அடித்த நீங்கள் கருணையின் வடிவமா?
உங்கள் அரவணைப்பில் சகோதரியாக இருந்த பெண் த.வெ.க. மாவட்டசெயலாளரால் அசிங்கப்பட்டாரே, அந்த பெண்ணை சந்தித்தீர்களா? 500 கோடி சம்பளம் வாங்கும் நீ, இந்த தயாரிப்பாளர்களுக்கு இன்றுவரை உதவியது உண்டா? கடந்த கால அரசியல் தெரியாது எவனோ எழுதித் தரும், அறிக்கையை வெளியிட்டு தான் ஒரு தற்குறி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்காதே. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
