சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம் மட்டும் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,‘‘நலம் காக்கும் ஸ்டாலின் மிகச் சிறப்பான திட்டம். ஏராளமான மக்கள் பயன் பெறுகிறார்கள் என்பதை பார்த்து மகிழ்ந்தேன்’’ என்று பதிவிட்டிருந்தார். இதைச்சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
உங்களைத் தேடி, உங்கள் பகுதிகளுக்கே வந்து உங்களின் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம் 27ம் தேதி வரை மட்டும் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். முழு உடல் பரிசோதனைகள், சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்றவையால் தொடக்க நிலையிலேயே பல லட்சம் மக்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, உரிய உயர்தரச் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டு அவர்களின் உயிர் காத்துள்ளோம்.
முகாம்களிலேயே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து மக்களின் துயர் துடைத்துள்ளோம். நலம் பெற்றோரின் குடும்பத்தினர் கூறும் நன்றிகளோடு தொடர்கிறது நலம் காக்கும் ஸ்டாலின். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
