சென்னை: குடிமை தேர்வுகளில் நான் முதல்வன் திட்டத்தால் இளைஞர்கள் இலக்குகளை எளிதில் ஈட்டி வெற்றி குவிக்கின்றனர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 2017ம் ஆண்டிற்குப் பிறகு ஒரு கசப்பான உண்மை வெளிவரத் தொடங்கியது: தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில், குறிப்பாக ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தன.
இதற்குத் தரமான பயிற்சி பெறுவதில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், அதிகப்படியான நிதிச் சுமைகள், போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டத் தேவைப்படும் முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததுமே முக்கியக் காரணங்களாக அமைந்தன. கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு முறையான வழி காட்டல் கிடைக்கவில்லை. இதனால், 2021ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 27ஆக மிக மிகச் சரிந்தது.
இந்தச் சரிவைக் கண்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023 மார்ச் 7 அன்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் ‘நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு’ என்ற புதிய பிரிவை உருவாக்குமாறு எனக்கு அறிவுறுத்தினார். ‘நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு’ என்பது ஒரு குறுகிய காலமானிய உதவி அல்ல, அது ஒரு கட்டமைப்புச் சீர்திருத்தம். போட்டித் தேர்வுகளை எளிதில் அணுகக் கூடியதாகவும், குறைந்த செலவிலானதும், கட்டுப்படியாகக் கூடியதாகவும், இலட்சியக் கனவாகவும் மாற்றுவதே இதன் நோக்கம்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இது செயல்படுகிறது. 2023-24ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒன்றிய அரசுப் பணியாளர் ஆணையத்தின் குடிமைப் பணித் தேர்வு ஊக்கத் தொகைத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் 1,000 மாணவர்கள் வெளிப்படையான தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்குத் தயாராக மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவோருக்கு ரூ.25,000 ஒருமுறை ஊக்கத் தொகையாகவும், 2025 முதல் நேர்முக தேர்வுக்கு தகுதி பெறுவோருக்கு ரூ.50,000 தொகையும் வழங்கிட திராவிட மாடல் அரசு முன்வந்து உதவிக்கரம் நீட்டியது.2023-24 ம் ஆண்டில் 453 மாணவர்கள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 2024-25ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 559 ஆக உயர்ந்தது. அவர்களில் 134 பேர் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று, 50 பேர் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர்.
அவர்களில் ஒருவரான சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23வது இடத்தைப் பிடித்து தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றார். 2025-26ம் ஆண்டில், 659 பேர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 155 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர், இவர்களில் 87 பேர் திராவிட மாடல் அரசின் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது முதல்வர் மு.க.ஸ்டாலினின் துடிப்பான தூய தமிழர் நேய உணர்வுக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றியாகும்.
இந்த மகத்தான வெற்றிக்கு எடுத்துக்காட்டு தென்காசியைச் சேர்ந்த எஸ்.இன்பா என்பவரின் கதை ஒரு சிறந்த உதாரணம். ஓய்வு பெற்ற பேருந்து நடத்துநர் மற்றும் பீடித் தொழிலாளியின் மகளான இவர், மாவட்ட நூலகத்தைத் தனது இரண்டாவது இல்லமாக மாற்றிக் கொண்டார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பயனாக, 2023ம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று இவர் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இவருடைய வெற்றி தனிப்பட்ட ஒன்றல்ல; தடைகள் நீக்கப்பட்டால், சாதனைகளை நிகழ்த்தி மாற்றங்களைப் படைப்பவர்கள் தமிழர்கள் என்பதற்கான அடையாளம் ஆகும். குடிமைப் பணித் தேர்வுகளுக்கு அப்பால், ஒன்றிய அரசுப் பணித் தேர்வு- எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கித் தேர்வுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி உள்ளிட்ட வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
முதல் ஆண்டில் பயிற்சி பெற்ற 510 மாணவர்களில், 80 பேர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ரயில்வே துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2025 அக்டோபரில் இரண்டாம் கட்டப் பயிற்சிகள் கூடுதல் வசதிகளுடன் தொடங்கப்படுகின்றன. தர்மபுரியைச் சேர்ந்த கே.புவனேஸ்வரி என்ற விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி, இந்தத் திட்டத்தின் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேளாண் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
வருமானமோ அல்லது இருப்பிடமோ ஒருவரின் வெற்றிக்கு தடையல்ல என்பதை இது நிரூபிக்கிறது. புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இத்திட்டத்தில் முழுமையான வெளிப் படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது: தகுதி அடிப்படையில் தேர்வு, நேரடியாக வங்கிக் கணக்கில் உதவி தொகை, மற்றும் முறையான தணிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
‘நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவு’ மூலம், தமிழ்நாடு ஒரு உள்ளடக்கிய மற்றும் தகுதி அடிப்படையிலான பொதுச் சேவைப் பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. சிறந்து விளங்குவதும், சமத்துவத்தை பேணுவதும் ஒன்றிற்கொன்று முரணானவை அல்ல, மாறாக அவை ஒன்றை ஒன்று முழுமைப்படுத்துபவை என்ற செய்தியை இது உலகிற்கு பறைசாற்றுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
