நீர் மூழ்கி கப்பலில் ஜனாதிபதி முர்மு பயணம்

புதுடெல்லி:ஜனாதிபதி திரவுபதி முர்மு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் வாக்‌ஷீர்’ நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து வரலாறு படைத்துள்ளார். மறைந்த அப்துல் கலாமிற்குப் பிறகு நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த பெருமையை அவர் பெற்றுள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவா,கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக அவர் நேற்று முன்தினம் மாலை டெல்லியில் இருந்து கோவாவுக்கு சென்றார். சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை கர்நாடகாவில் உள்ள, கார்வாருக்கு வந்தார். அதன் பின்னர் கார்வாரில் உள்ள கடற்படை தளத்திற்கு ஜனாதிபதி வந்தார். கார்வார் கடற்படை தளத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கல்வாரி ரகத்தை சேர்ந்த ஐஎன்எஸ் வாக்ஷீர் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார்.

கடற்படை சீருடை அணிந்திருந்த முர்மு கப்பலில் ஏறும் போது அங்கிருந்தவர்களை பார்த்து கையசைத்தார். இந்த பயணத்தின் போது கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி உடனிருந்தார். இதற்கு முன், கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முதல்முறையாக நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்திருந்தார். சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திரவுபதி முர்மு இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: