குடிபோதையில் ஓட்டியதால் விபரீதம்; பாஜக நிர்வாகியின் கார் மோதி சிறுவன் உட்பட இருவர் பலி: குற்றவாளியை போலீஸ் தப்பிக்கவிட்டதால் பரபரப்பு

மொரேனா: மத்தியப் பிரதேசத்தில் சாலையோரம் குளிர்காய்ந்து கொண்டிருந்தவர்கள் மீது பாஜக இளைஞரணி நிர்வாகியின் கார் மோதியதில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில், போர்சா பகுதியில் இருந்து ஜோதாய் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இந்த கோர விபத்தில் அர்னவ் என்ற 11 வயது சிறுவனும், ராம்தத் ரத்தோர் என்ற 65 வயது முதியவரும் படுகாயமடைந்து குவாலியர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கமலேஷ், கிர்ராஜ் மற்றும் அபிஷேக் தோமர் ஆகிய 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் பாஜக இளைஞரணியின் நகர மண்டலத் தலைவர் திபேந்திர பதாரியா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்ததும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருப்பினும், காவல் நிலையத்திலிருந்து அவர் தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த மக்கள் நெடுஞ்சாலையை மறித்து 20 நிமிடங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘போலீசார் அவருக்கு தப்பியோட உதவினர்’ என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார், நேற்று திபேந்திர பதாரியாவை மீண்டும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: