புதுடெல்லி: ‘காங்கிரஸ் ஒரு சித்தாந்தம், சித்தாந்தங்கள் ஒருபோதும் அழிவதில்லை’ என கட்சியின் 140ம் ஆண்டு நிறுவன தின விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். காங்கிரஸ் கட்சியின் 140ம் ஆண்டு நிறுவன விழா டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமையகமான இந்திரா பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: காங்கிரசின் மாபெரும் தலைவர்களால்தான் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மாறி உள்ளது. இன்றைய நிறுவன தினத்தில், ‘காங்கிரஸ் முடிந்துவிட்டது’ என்று கூறுபவர்களுக்கு நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நமது பலம் குறைவாக இருக்கலாம்.
ஆனால் நமது முதுகெலும்பு இன்னும் நேராகவே இருக்கிறது. நாங்கள் அரசியலமைப்பு சட்டம், ஏழைகளின் உரிமைகள், மதச்சார்பின்மையில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை. நாங்கள் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் பேரம் பேச மாட்டோம். காங்கிரஸ் ஒருபோதும் மதத்தால் வாக்கு கேட்டதில்லை. அனைவரையும் காங்கிரஸ் ஒன்றிணைக்கிறது. பாஜ பிளவுபடுத்துகிறது.
இன்று, பாஜவிடம் அதிகாரம் உள்ளது, ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை. எனவேதான், சில சமயங்களில் தரவுகள் மறைக்கப்படுகின்றன, சில சமயங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்படுகிறது, சில சமயங்களில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவது பற்றிய பேச்சுக்கள் எழுகின்றன. காங்கிரஸ் ஒரு சித்தாந்தம், சித்தாந்தங்கள் ஒருபோதும் அழிவதில்லை.
காங்கிரஸ் கட்சி எப்போதும் இந்திய மக்களின் நலன், அதிகாரமளித்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவே பாடுபட்டு வருகிறது. காங்கிரசின் 140 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாறு, உண்மை, அகிம்சை, தியாகம், போராட்டம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றின் மாபெரும் காவியத்தை விவரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
* இந்தியாவின் ஆன்மாவின் குரல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘வெறுப்பு, அநீதி மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக உண்மை, தைரியம் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக இன்னும் வலிமையாகப் போராடுவதே நமது உறுதிமொழி.
இன்று காங்கிரசின் நிறுவன தினத்தில் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த, அரசியலமைப்பிற்கு அடித்தளமிட்ட, மற்றும் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் மதிப்புகளை வலுப்படுத்திய அந்த வரலாற்றுப் பாரம்பரியத்திற்கும், அந்த மாபெரும் தியாகங்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்’’ என கூறி உள்ளார்.
