எஸ்ஐஆர் மூலம் உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்? வரைவு பட்டியல் வரும் 31ல் வெளியீடு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் எஸ்ஐஆருக்குப் பிறகு வரும் 31ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் 2.89 கோடி நீக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடந்த நவம்பர் 4ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதில் 11 மாநிலங்களில் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2 முறை கணக்கெடுப்பு பணிக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் 31ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், எஸ்ஐஆர் மூலம் இம்மாநிலத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி நவதீப் ரின்வா நேற்று அளித்த பேட்டியில், ‘‘வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 12.55 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

எஸ்ஐஆருக்கு முன் 15 கோடியே 44 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில் அவர்களில் 2.89 கோடி பேர் (18.70%) நீக்கப்பட்டுள்ளனர். நீக்ப்பட்டவர்கள் ஜனவரி 1 முதல் உரிய ஆவணங்கள் கொடுத்து பெயரை சேர்க்கலாம். வரைவு பட்டியலில் இடம் பெற்றவர்களில் 1 கோடிக்கும் அதிகமானோர் முந்தைய எஸ்ஐஆர் பட்டியலுடன் பெயர் இணைக்கப்படாதவர்கள்.

அவர்கள் 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பிப். 21க்குள் சமர்பிக்க வேண்டும். பிப்ரவரி 28ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும்’’ என்றார். எஸ்ஐஆர் நடத்தப்பட்டதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 1 கோடி வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இடம் பெறாத நிலையில், உபியில் 2.89 கோடி பேர் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: