திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற பிரச்னை காரணமாக, கடந்த டிச. 3ம் தேதி முதல் பக்தர்கள் மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 21ம் தேதி சிக்கந்தர் பாஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து டிச. 23ம் தேதி முதல் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் தினந்தோறும் மலைக்கு சென்று அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர். முஸ்லிம்களும் தர்காவுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று கேரளாவை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் தர்காவிற்கு செல்வதற்காக வந்தனர்.
அவர்களில் சிலர் பிரியாணியுடன் வந்திருந்தனர். போலீசார் அசைவ உணவுகளை அனுமதிக்க முடியாது என்று கூறினர். அவர்கள் மதிய உணவுக்காக கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் அனுமதிக்க மறுத்ததை அடுத்து, அவர்கள் பிரியாணியுடன் ஒருவரை கீழே வைத்துவிட்டு மலையேறி சென்றனர்.
