குலசேகரம்: குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு அடுத்ததாக பெரிய சுற்றுலா தலமாக திற்பரப்பு அருவி உள்ளது. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் கோதையாறு அருவியாக விழுவதால் குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது. இதனால் எல்லா நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை காணப்படும். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகுதியாக காணப்படும்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக வடகிழக்கு பருவமழை கனமழையாகவும், சாரல் மழையாகவும் பெய்ததால் அருவியில் தண்ணீர் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்து கொட்டுகிறது. தற்போது பகல் நேரத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. இரவு மற்றும் காலையில் குளிர்ந்த கால நிலை நிலவுகிறது. இதற்கிடையே பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ், புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதேபோல் திற்பரப்பு அருவியில் குளிக்கும் ஆர்வத்துடன் வரும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இதனால் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் திற்பரப்பில் குவிந்தனர். பின்னர் அவர்கள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். மேலும் திற்பரப்பு தடுப்பணையில் நடைபெறும் உல்லாச படகு சவாரி பகுதிக்கும் பயணிகள் ஆர்வமுடன் சென்று படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.
