சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு திண்டுக்கல் தொழிலதிபரிடம் கேரள எஸ்ஐடி விசாரணை

திண்டுக்கல்: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு விவகாரத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம், கேரள எஸ்ஐடி போலீசார் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்களில் 4.54 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக உயர்நீதிமன்ற அமர்வு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது.

இடைத்தரகராக செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் பேத்தி, தேவசம் போர்டு துணை ஆணையர் முராரி பாபு, செயலாளர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், திருவாபரண பெட்டியின் முன்னாள் ஆணையர் பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் தேவசம் போர்டு வாரிய நிர்வாக அதிகாரி சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில் 400 கிராம் தங்கத்தை கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த தங்க வியாபாரி கோவர்தனிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து பல்லாரி வந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தங்க வியாபாரி கோவர்தன், ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவன தலைமை செயலதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோரை கைது செய்து திருவனந்தபுரம் அழைத்து சென்றனர். தற்போது அவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில் திண்டுக்கல்லில் ரவுண்ட் ரோடு அருகேயுள்ள ராம்நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் எம்எஸ்.மணி (எ) சுப்பிரமணியன் அலுவலகத்தில் நேற்று காலை 12 மணி முதல் கேரளா டிஎஸ்பி சுரேஷ் பாபு மற்றும் எஸ்ஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

சுமார் 2 மணிநேர விசாரணைக்கு பின் அலுவலகத்தில் உள்ள கோப்புகளையும் ஆய்வு செய்தனர். பின்னர் சுப்பிரமணியன் நேரில் ஆஜராக சம்மன் வழங்கி சென்றதாக எஸ்ஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.  விசாரணைக்கு பின் எம்எஸ்.மணி என்ற சுப்பிரமணியன் கூறுகையில், ‘கேரள எஸ்ஐடி போலீசார் டி.மணி என்ற நபரை தேடி வந்துள்ளனர். என்னிடம் நேரில் ஆஜராக சம்மன் எதுவும் வழங்கவில்லை’ என்றார்.

Related Stories: