கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டில் ஸ்டாலின் இருக்கும் வரை, திமுக ஆட்சி இருக்கும் வரை மதவெறி ஆட்டத்துக்கு இடம் கிடையாது. ஒற்றுமையாக வாழுகின்ற தமிழ்நாட்டு மக்களிடம் மதவெறியை தூண்ட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஓட்டுகளால் விரட்டி அடிப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு மகுடமாக, 2026 தேர்தலில், மக்கள் அளிக்கும் தீர்ப்புதான், உங்களுக்கான (அதிமுக, பாஜ) ரியாலிட்டி ‘செக்’-ஆக இருக்கும். தமிழ்நாட்டின் சாதனைகள் வளர்ச்சி நிறைந்த ஒரு இந்தியா என்றால், பாஜ ஆளும் மாநிலங்களில் வேறு ஒரு இந்தியா இருக்கிறது. வறுமை, மத வன்முறை, கும்பல் படுகொலைகள், கல்வியைக் கெடுக்கும் முயற்சிகள், வேலை வாய்ப்பின்மை… இதுதான் பாஜவின் இந்தியா.
கிறிஸ்துமஸ் அன்றைக்குக்கூட மாற்றுத் திறனாளிகளையும், குழந்தைகளையும் தாக்குகின்ற மோசமான சூழலை பாஜ அரசு உருவாக்கி இருக்கிறது. இந்த மாடலைத்தான் தமிழ்நாட்டிலும் கொண்டு வரவேண்டும் என்று பார்க்கிறார்கள். ஆனால், நம்முடைய மக்கள் மிகவும் உஷார். திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள். மதுரை சித்திரை திருவிழாவிற்கு வரும் இந்து பக்தர்களுக்கு பள்ளிவாசல் முன்பு இஸ்லாமிய சகோதரர்கள் ரோஸ்மில்க் வழங்குகிறார்கள்.
தை முதல் நாள் அன்றைக்கு தேவாலயத்தில், பொங்கல் வைத்து படைக்கிறார்கள். கிறிஸ்துமஸ், ரம்ஜான் வந்துவிட்டால், இந்து நண்பர்கள் எல்லாம் “கேக், பிரியாணி எங்கே?” என்று உரிமையாக கேட்கிறார்கள். எம்மதமும் சம்மதம் என்கின்ற தமிழ்நாட்டு மக்களின் இந்த ஒற்றுமை, நல்லிணக்கம்தான் மதவாத அரசியல் செய்து மக்களைப் பிளவுபடுத்த நினைக்கின்ற, பாஜவின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது.
அவர்கள் எத்தனை அடிமைகளை சேர்த்துக் கொண்டு அந்தர் பல்டி அடித்தாலும் சரி, ஒற்றுமையாக வாழுகின்ற தமிழ்நாட்டு மக்களிடம் மதவெறியை தூண்ட முடியாது. இந்த ஸ்டாலின் இருக்கின்ற வரைக்கும், எங்கள் திராவிட மாடல் அரசு இருக்கின்ற வரைக்கும், உங்களுடைய மதவெறி ஆட்டத்திற்கு இங்கே இடம் கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஓட்டுகளால் விரட்டி அடிப்பார்கள். நீங்கள் என்ன செய்தாலும் சரி, என்ன நாடகம் நடத்தினாலும் சரி, தமிழ்நாட்டில் உங்கள் வித்தை, வேலைக்கே ஆகாது. உங்கள் பாட்சா பலிக்காது.
திராவிட மாடல் 2.0 உறுதியாகிவிட்ட ஒன்று. நம்முடைய கடமை எல்லாம், வாக்காளர் பட்டியலில் நம்முடைய பெயரை உறுதி செய்வதுதான். நீங்கள் அனைவரும் உறுதி செய்து விட்டீர்களா? நியூஸில் பாத்திருப்பீர்கள். இறந்த பல பேர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்கள். 50 ஆண்டுகளாக ஒரே அட்ரஸில் இருப்பவர்கள், பிரபல பத்திரிகையாளர்கள் என்று பலருடைய பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபட்டிருக்கிறது.
இதனால்தான், “அவசர கோலத்தில், இந்த எஸ்ஐஆர் பணிகளை செய்யக்கூடாது, போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று சொன்னோம்! லிஸ்டில் பெயர் இல்லாதவர்கள் உடனே உங்கள் பெயரை இணைத்துக் கொள்ள அப்ளை செய்யுங்கள். ஒவ்வொருவரின் வாக்குரிமையையும், இந்தியாவின் ஜனநாயகத்தையும் பாதுகாக்க, திராவிட மாடல் அரசும், திமுகவும் உங்களுக்கு நிச்சயமாக, துணையாக இருப்போம்.
2026ஆம் ஆண்டில், தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் துவங்கப் போகிறது. அதற்கு, நீங்கள் அனைவரும் துணையாக எப்போதும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக ஏமப்பேர் ரவுண்டானா புறவழிச்சாலை பகுதியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி வருகை தந்த முதல்வருக்கு தியாகதுருகம் அடுத்த திம்மலையில் மாவட்ட திமுக சார்பில் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
* வறுமை, மத வன்முறை, கும்பல் படுகொலைகள், கல்வியைக் கெடுக்கும் முயற்சிகள், வேலை வாய்ப்பின்மை… இதுதான் பாஜவின் இந்தியா.
* தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஓட்டுகளால் விரட்டி அடிப்பார்கள். நீங்கள் என்ன செய்தாலும் சரி, என்ன நாடகம் நடத்தினாலும் சரி, தமிழ்நாட்டில் உங்கள் வித்தை, வேலைக்கே ஆகாது.
* எத்தனை அடிமைகளை சேர்த்துக் கொண்டு அந்தர் பல்டி அடித்தாலும் சரி, ஒற்றுமையாக வாழுகின்ற தமிழ்நாட்டு மக்களிடம் மதவெறியை தூண்ட முடியாது.
