கேந்தி பூ விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

 

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் கேந்தி பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் வாழை, தென்னை, நெல், மக்காச்சோளம், பருத்தி போன்றவை பயிரிட்டு வருகின்றனர். இதுதவிர பூக்கள், காய்கறி சாகுபடியிலும் ஈடுபடுகின்றனர். தற்போது கீழக்கோட்டையூர், பூவானி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் மல்லிகை, கேந்தி பூ போன்றவை சாகுபடி செய்துள்ளனர். தற்போது பூக்கள் அறுவடை தொடங்கியுள்ளது. கேந்தி பூவிற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு கேந்தி பூ நாற்று ரூ.3 வீதம் விலைக்கு வாங்கி நடவு செய்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தோம். தற்போது அறுவடை நேரத்தில் பூக்கள் விலை குறைந்துள்ளது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.150க்கு விற்கப்பட்ட கேந்தி பூ தற்போது ரூ.20க்கு விற்பனையாகிறது. கூலி கொடுக்கக்கூட கட்டுப்படியாகாததால் பறிக்காமல் செடிகளிலேயே பூக்களை விட்டு விடுகிறோம். பூக்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராததால் குப்பையில் கொட்டும் நிலை உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: