கருங்கல் அருகே இரவில் பரபரப்பு; வாலிபர்கள் பைக் ரேஸ் செய்து அடாவடி: கிராம மக்கள் விரட்டியடித்தனர்

 

கருங்கல்: குமரி மாவட்டத்தில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசார் நாள் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு கருங்கல் ஆலஞ்சி பகுதியில் 100க்கும் மேற்பட்ட பைக்குகளில் வாலிபர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென பைக்ரேசில் ஈடுபட்டதுடன் வீலிங் செய்து அதிக சத்தத்தை எழுப்பினர். இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிய அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளி ஒருவர் ஏன்? இவ்வாறு சத்தம் எழுப்பி ரேஸில் ஈடுபடுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதை கண்டுகொள்ளாத அந்த வாலிபர்கள் மீண்டும் வீலிங் செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்த அப்பகுதி அப்பகுதி மக்கள் ரேஸிங்கில் ஈடுபட்ட வாலிபர்களிடம் தட்டிகேட்டனர். பின்னர் பைக் ரேசில் ஈடுபட்டு அடாவடி செய்த வாலிபர்களை கிராம மக்கள் துரத்தியடித்தனர். இதனால் வாலிபர்கள் பைக்கில் அங்கிருந்து செல்ல முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அதிரடி படையினர் பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அப்போது வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த பைக் அதிரடிப்படையை சேர்ந்த காவலர் அருள்ராஜ் (36) என்பவர் மீது மோதியது. படுகாயமடைந்த அருள்ராஜ் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கருங்கல் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்காததே இந்த பிரச்சனைக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மிடாலம் கடற்கரை பகுதியில் அதிகாலை 3 மணிக்கு டிஜே பார்ட்டியுடன் கும்மாளம் நடக்கிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் எச்சரிக்கை விடுத்ததன் பேரில், அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: