தொழில் வழிகாட்டி நிறுவன அறிவிப்பின்படி இந்தியாவின் அறிவுசார் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குச் சிந்தனைகளுடன் கூடிய கடுமையான உழைப்புகளின் பயனாகத் தமிழ்நாடு 2021 ஆம் ஆண்டு தொடங்கி அபரிமிதமான முன்னேற்றங்களைப் படைத்து இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலமாக எழுச்சி பெற்றுள்ளது. அண்மைச் சில நாள்களுக்கு முன் ஒன்றிய அரசின் இந்திய ரிசர்வ் வங்கி இந்திய மாநிலங்களின் வளர்ச்சி நிலைகள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்நாட்டு உற்பத்திகளில் (GSDP) தமிழ்நாடு 16 சதவீதம் பெற்று இந்தியாவில் உச்சம் கண்டுள்ளது எனப் புதிய சாதனையை வெளிப்படுத்தியது.

அதனை தொடர்ந்து, 18.12.2025 அன்று தொழில் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய காப்புரிமைப் பதிவுகளில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது; மற்ற மாநிலங்களை விட மிக பெரிய இடைவெளியுடன் 23 சதவீதம் வளர்ச்சிகண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என்னும் விவரம் தெரியவந்துள்ளது. அதாவது, இந்தியாவில் காப்புரிமை (Patents) தாக்கல் செய்வதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து, நாட்டின் அறிவுசார் தலைநகராகத் தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.இந்திய அளவில் பதிவுக்காக விண்ணப்பிக்கப்பட்ட மொத்தம் (68,201), காப்புரிமைகளில் தமிழ்நாடு மட்டுமே 15,440 காப்புரிமைகளைப் பதிவு செய்துள்ளது. இது நாட்டின் மொத்த எண்ணிக்கையில் ஏறத்தாழ 23 சதவீதம் ஆகும். இப்படி, காப்புரிமை பெறுவதில் மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு மிகப்பெரிய இடைவெளியில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி விகிதம்:
முந்தைய 2023–2024 ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில், 2024–2025 ஆம் நிதியாண்டில் காப்புரிமை தாக்கல் செய்வது 9,565-லிருந்து 15,440- ஆக உயர்ந்துள்ளது. இந்த 62 சதவீதம் வளர்ச்சி, மாநிலத்தில் உள்நாட்டுக் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் அதிவேகமாக விரைவுபடுத்தப்பட்டு வருவதைப் பிரதிபலிக்கிறது.

தமிழ்நாட்டின் ஆழமான ஆராய்ச்சித் தளம், வலுவான தொழில்முறை வலிமை, கல்வி நிறுவனங்களுக்கும் – தொழில் துறையினருக்கும் இடையே நிலவும் நெருக்கமான ஒருங்கிணைந்த சூழல் (Academia–Industry Ecosystem) ஆகியவை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு இவை முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. இந்தத் தொடர் வளர்ச்சியின் மூலம், இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை மற்றும் கண்டுபிடிப்புத் துறையில் தமிழ்நாடு ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

Related Stories: