சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (19.12.2025) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவரை 20,000 இருதய இடையீட்டு சிகிச்சைகள், 500 ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்துள்ளதையொட்டி, மருத்துவ பயனாளர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
பிறகு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சட்டமன்ற வளாகமாக கட்டமைத்ததை அனைவரும் நன்றாக அறிவீர்கள்.
அதற்கு பின்னர் வந்த அரசு மருத்துவமனையாக மாற்றினார்கள் என்றாலும் பல்வேறு சிறப்பு துறைகள் இன்றி ஒரு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. மருத்துமனையாக மாற்றப்பட்ட நாள் முதல் தினந்தோருமான புற மருத்துவப் பயனாளிகளின் எண்ணிக்கை 500 முதல் 700 வரை இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றதற்கு பிறகு, பல்வேறு வகையான பன்னோக்கு சிகிச்சை துறைகள் தொடர்ச்சியாக தொடங்கி வைக்கப்பட்டது
ரூ.34.60 கோடி செலவில் ரோபோடிக் கருவி
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பன்னோக்கு மருத்துவமனையில் 2022 மார்ச் திங்கள் 15 ஆம் தேதி மேம்படுத்தப்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் ஒன்று தொடங்கி வைக்கப்பட்டது. ரூ.34.60 கோடி மதிப்பிலான ரோபோடிக் கருவி இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத ஒன்று.
தமிழ்நாட்டில் 5 தனியார் மருத்துவமனைகளில் உள்ளது நம்முடைய மாநில அரசு மருத்துவமனையில் 2022 மார்ச் திங்கள் 15 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அந்த மேம்படுத்தப்பட்ட ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையம் இன்றைக்கு சீறுநீரக அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், நாளம்மில்லா சுரப்பி அறுவை சிகிச்சைகள். இருதய அறுவை சிகிச்சைகள், இரைப்பை குடல் அறுவை சிகிச்சைகள் போன்றவைகள் ரோபோடிக் முறையில் 3டி பார்வை மூலம் உடல் உறுப்புகள் தெளிவாக தெரியும் வகையில் அவற்றின் மூலம் அறுவை சிகிச்சைகள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான சிகிச்சை தழும்புகள் மட்டுமே ஏற்படுவதால் பயனாளர்கள் நீண்ட நாட்கள் மருத்துவமனைகளில் தங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்திரத்தை பயற்சி பெற்ற மருத்துவர்கள் பயன்படுத்தி இங்கே பாராட்டுக்களை பெற்றுள்ள மருத்துவ பெருமக்கள் இதுவரை திறந்து வைக்கப்பட்ட நாள்வரை சற்றோப்பம் 2.5 ஆண்டு காலத்தில் 500 அறுவை சிகிச்சைகள் சிறப்பாக நடத்தப்பட்டு மகத்தான சாதனை படைத்துள்ளார்கள். ரூ.20 இலட்சம் வரை செலவாகின்ற இந்த பலன் ஏழை எளிய மக்களுக்கு, பாதிப்பு உள்ளானவர்களுக்கு இன்றைக்கு அரசின் சார்பில் விலையில்லாமல் செய்யப்பட்டு அவர்கள் உயிர்கள் பாதுகாக்கப்படுகிறது.
* இருதயவியல் துறை
இந்த மருத்துவமனை வளாகத்தில் 2014 இல் இருதயவியல் துறை தொடங்கப்பட்டதற்கு பிறகு இங்கே மேற்கொள்ளபட்டு வருகின்ற சிகிச்சைகள் குறிப்பாக இன்றைக்கு உலகம் முழுவதும் கோவிட் பேரிடருக்கு பிறகு இருதயவியல் நோய் பாதிப்புகள் என்பது அதிகரித்து வருவதை நாம் நன்றாக அறிவோம். இளம் வயதினரும் கூட இருதயவியல் நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகி உலகம் முழுவதும் உயிர் இழப்பதை நாம் நன்றாக அறிவோம். WHO ICMR என்கிற நிறுவனங்கள் இதுகுறித்தான ஆராய்ச்சிகளை கடந்த ஆண்டுகளாக தொடர்ச்சியாக 2 மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த மருத்துவமனைக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 500 பேர் வரை இருதய சிகிச்சைகளுக்கு வருகிறார்கள். தற்போது இந்த மருத்துவமனையில் தினந்தோறும் சுமார் 2500 பேர் வரை மருத்துவ பயனாளர்கள் வருகை புரிந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இருதயவியல் துறையைப் பொறுத்தவரை இருதய ஓட்டைகளை அடைத்தல், அடைப்புகளை நீக்குதல், ஸ்டன்ட் பொறுத்துதல், ஆஞ்சியோகிராம் செய்தல், இருதய வால்வு பொறுத்துதல், பைபாஸ் சர்ஜரி, இருதய மாற்று அறுவை சிகிச்சை என்று தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த 4.5 ஆண்டுகளில் மட்டும் 20,000 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள்.
ஆகையால் இச்சிகிச்சையினை திறம்பட வழங்கிய மருத்துவக் குழுவினர்களுக்கு இத்துறையின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் 73 வயதுள்ள ஒருவருக்கு பெருந்தமணியின் அடிப்பகுதியில் ஏற்பட்ட கிழிவு அறுவை சிகிச்சையின்றி தோல் நுழைவு கருவி மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவனைகளுக்கு சென்றிருந்தால் ரூ.10 இலட்சம் வரை செலவாகி இருக்கும். இந்த மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு உலகிலேயே முதன்முறையாக இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* சிறப்பு துறைகள் உருவாக்கம்
இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு இம்மருத்துவமனையில் புதிய பல்வேறு துறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது குடல் இரைப்பை அறுவை சிகிச்சைத்துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத்துறை, பிராச்சி தெரபி (Brachy Therapy) போன்ற பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரிடையாக வருகை புரிந்து கர்ப்ப பரிசோதனைகள் Maternal Serum Screening என்கின்ற புதிய பிரிவு தொடங்கி கருவுற்ற ஓரிரு வாரங்களில் குழந்தைக்கான பாதிப்புகள் பற்றிய உண்மை நிலைகளை தெரிந்து கொள்வதற்குரிய ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு அதுவும் மிகச் சிறப்பான வகையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த மருத்துவமனையில் இன்னுமொரு கூடுதல் சிறப்பாக மிக விரைவில் விளையாட்டு வீரர்களுக்கு என்று புதிதாக சிகிச்சை பிரிவு தொடங்கப்படவிருக்கிறது. ரூ.7.70 கோடி மதிப்பீட்டில் மிக விரைவில் விளையாட்டு வீரர்களுக்கு என்று பிரத்யேகமாக சிகிச்சை பிரிவு தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இப்பிரிவினை மிக விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்கள். அரிய வகைகளில் ஆன சாதனைகளை அன்றாடம் செய்து வருகின்ற மருத்துவர்கள் நிறைந்த இடமாக அரசு மருத்துவமனைகள் இருக்கிறது என்பதற்கு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை சான்றாக இருந்துக் கொண்டிருக்கிறது
இதனால்தான் 4.5 ஆண்டுகளில் 20,000 இடையீட்டு சிகிச்சைகள் சாத்தியமாகி இருக்கின்றது. 500க்கும் மேற்பட்ட ரோபோடிக் சிகிச்சை முறைகள் நடைபெற்று எனவே இதற்கு காரணமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
* MBBS/BDS சிறப்பு கலந்தாய்வு தொடர்பான கேள்விக்கு
மருத்துவ மாணவர் சேர்க்கையில் முழுமையாக துறையின் சார்பில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 4 சுற்றுக்களாக நடத்தப்பட்டு அனைத்து இடங்களும் பூர்த்தியான நிலையில் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் இடையில் நின்றுவிடுவது அல்லது பல்வேறு காரணங்களுக்காக இடை நிற்றல் போன்ற காரணங்களினால் மருத்துவ இடங்கள் 23 என்கின்ற எண்ணிக்கையில் காலியாக இருக்கின்றது. அரசு மருத்துவக்கல்லூரிகள் 1. தனியார் மருத்துவக்கல்லூரிகள் 3, சுயநிதி ஒதுக்கீடு என்று 19 என்றும் 23 மருத்துவ மாணவர்கள் காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.
பல் மருத்துவர் சேர்க்கை 27 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது. அரசுக் கல்லூரிகளில் 3. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 21, சுயநிதி ஒதுக்கீடு 3 என மொத்தம் 27 பல் மருத்துவ சேர்க்கை காலியாக உள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, இத்துறையின் செயலாளர் அவர்கள் கடந்த 10.12.2025 அன்று ஒன்றிய அரசு மெடிக்கல் கவுன்சில் கமிட்டிக்கு (Medical Council Committee) கடிதம் அனுப்பி மருத்துவ மாணவர் சேர்க்கையினை உடனடியாக நிரப்புவதற்கு அனுமதி கடிதம் எழுதினார்கள். அதற்கு ஒன்றிய அரசும் 17.12.2025 அனுமதி வழங்கினார்கள். அந்த அனுமதியின் காரணமாக வரும் 20.12.2025 முதல் 23.12.2025 வரை மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு சுற்று நடத்தப்படவிருக்கிறது.
* செவிலியர்கள் போராட்டம் தொடர்பான கேள்விக்கு
இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 11 மருத்துவக்கல்லூரிகள் திறந்து பணிகள் வைத்ததற்கு பிறகு 1200 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. செவிலியர்களை பொறுத்தவரை அவர்களை புறக்கணிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. இவர்கள் இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் இல்லை. ஏற்கெனவே 9 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு பணிநியமனம் வழங்குவது தொடர்பாக அரசாணை உள்ளது. She/he is cannot claim as a right for regular post in the time scale of pay on completion of two years of service. She/he will be absorbed into regular time scale of pay as and when vacancies arise according to the seniority of selection என்று ஆணையில் குறிப்பிட்டவாறு காலிப்பணியிடங்கள் உருவாவதைப் பொறுத்து இவர்களை உள்ளே சேர்க்க வேண்டும். இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு 2021இல் 251 காலிப்பணியிடங்கள் உருவானது. இவர்களை நிரந்தரம் செய்திருக்கிறோம். 2022இல் 678 காலிப்பணியிடங்கள் உருவானது. அதை நிரப்பப்பட்டுள்ளது. 2023இல் 489 பேர், 2024இல் புதிதாக உருவான 11 மருத்துவக்கல்லூரிகளிலும் சேர்த்து 694 செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் செய்திருக்கிறோம்.
2025இல் 502 பேருக்கு ஆணைகள் கொடுத்திருக்கிறோம். தற்போது கூட 169 பேருக்கு காலிப்பணியிடங்கள் உருவாகியிருக்கிறது. இந்த 169 பேருக்கும் நிரந்தர பணி ஆணைகள் இன்னும் சில நாட்களில் வழங்கப்படவுள்ளது. இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு 3,783 செவிலியர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். இன்னும் 8,322 பேர் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும். பணி ஆணைகள் வழங்கப்படும்போதே காலிப்பணியிடங்கள் உருவாகும்பட்சத்தில் பணிநிரந்தரம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் இருந்தும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை என்று குற்றம் சொன்னால் பரவாயில்லை. காலிப்பணியிடங்களே இல்லை என்கின்ற நிலையினை இத்துறை உருவாக்கி வைத்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் போராட்டங்கள் நடத்துவது ஜனநாயக உரிமை அல்ல. அதேபோல் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணைகளில் உள்ள விதிமுறைகளை தெரிந்து கொள்வது நல்லது. யாரையும் இந்த அரசு கைவிடவில்லை. மேலும் கோவிட் காலங்களில் பணிபுரிந்த 714 பேர் நீதிமன்றம் மூலம் சென்று communual roatation மூலம் அவர்களையும் பட்டியலில் சேர்க்க உள்ளோம்.
இருப்பினும் போராடும் செவிலியர்கள் பேச வந்தாலும் அவர்களிடம் பேச தயாராக இருக்கிறோம் என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் சித்ரா, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மணி, தேர்வுக்குழு செயலாளர் லோகநாயகி, துணை இயக்குநர் (தேர்வுக்குழு) கராமத் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவப் பயனாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்
