திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து ஜனவரி 8ம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள், சொர்க்க வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து, ராப்பத்து, சொர்க்கவாசல் திறப்பு என மொத்தம் 21 நாட்கள் நடத்தப்படும்.

அப்போது ரங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று, திருநெடுந்தாண்டகம் எனப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்படும். ஸ்ரீரங்கம் கோயிலில் நாலாயிர திவ்யபிரபந்தம் படிக்க ஆரம்பித்தவுடன் மற்ற திவ்ய தேசங்களில் இருந்து பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருளுவர் என்பது ஐதீகம். அதேபோல் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஏழுமலையான் கோயிலில் 25 நாட்கள் ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.

இந்த 25 நாட்களும் ஜீயர்கள் தலைமையில் சீடர்கள் ஒன்று கூடி நாலாயிர திவ்யபிரபந்த பாசுரங்களை தினமும் பாராயணம் செய்வார்கள். அதன்படி திருப்பதி ஏழுமலையான் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் நேற்றிரவு அத்யாயன உற்சவம் தொடங்கியது. இதில் ஜீயர்கள் தலைமையில் அவரது சீடர்கள் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட திவ்ய பிரபந்த பாசுரங்கள் பாடி பாராயணம் செய்தனர்.

ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 4 முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதில் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரமோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக செவ்வாய் கிழமைகளில் கோயில் சுத்திகரிப்பு (ஆழ்வார் திருமஞ்சனம்) நடத்தப்படும். அதன்படி வைகுண்ட ஏகாதசியொட்டி வரும் 23ம் தேதி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அஷ்டதள பாத பத்மாராதன சேவை, விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* 12 மணிநேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 64,729 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 22,162 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.4.31 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 8 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Related Stories: