அமெரிக்காவில் பயங்கர விமான விபத்து கார் பந்தய வீரர் உட்பட 7 பேர் தீயில் கருகி பலி: தரையிறங்கும்போது தீப்பற்றி வெடித்து சிதறியது

 

வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கியதில், பிரபல கார் பந்தய வீரர் கிரெக் பிஃபிள் தனது குடும்பத்துடன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவை சேர்ந்த ஓய்வுபெற்ற ‘நாஸ்கார்’ (கார் பந்தயம்) சாம்பியனான கிரெக் பிஃபிள் (55), தனது மனைவி கிறிஸ்டினா மற்றும் குழந்தைகளான ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா சி550 என்ற தனி விமானத்தில் பயணம் செய்தார்.

இவர்களுடன் டென்னிஸ் டட்டன், அவரது மகன் ஜாக் மற்றும் கிரெக் வாட்ஸ்வொர்த் ஆகியோரும் இருந்தனர். நேற்று காலை 10.06 மணியளவில் ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடாவை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்த நிலையில் கோளாறு காரணமாக திடீரென விமான நிலையத்திற்குத் திரும்பியது. அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையைத் தாண்டிச் சென்று ஆண்டெனா மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில், விமானம் தீப்பந்து போல மாறியதில் அதில் பயணித்த 7 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

விபத்து நடந்தபோது அப்பகுதியில் பனிமூட்டமும் லேசான மழையும் பெய்ததாகக் கூறப்படுகிறது. விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘விமானம் அதிக வேகத்தில் தரையிறங்கியதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம்’ என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: