சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: நமக்கு நாமே திட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் போன்றோர் 30 விழுக்காடு நிதியை அளிக்கும்பட்சத்தில், மீதமுள்ள 70 விழுக்காடு நிதியை அரசு வழங்கி அந்த திட்டத்தை நிறைவேற்றும். இந்த திட்டம் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பு தொடங்கப்பட்டது. மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட நகர்ப்புற பகுதிகளுக்காக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின்கீழ், 2021-22ம் ஆண்டு ரூ.148 கோடி மதிப்பில் 926 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை தொடர்ந்து 2022-23ம் ஆண்டு ரூ.208 கோடி மதிப்பில் 947 திட்டங்களும், 2023-24ம் ஆண்டு ரூ.98 கோடி மதிப்பில் 529 திட்டங்களும், 2024-2025ம் ஆண்டு ரூ.30 கோடி மதிப்பீட்டில் 74 திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. நடப்பு நிதியாண்டில் மேலும் குறையக்கூடும் என்று கூறப்படுகிறது. எனவே, முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, இந்த திட்டத்திற்கு தேவையான நிதியை உரிய நோத்தில் ஒதுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவவும், இத்திட்டத்திற்கென தனி இணையதளத்தை உருவாக்கி அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
