திண்டிவனம்: தைலாபுரத்தில் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி வரும் 31ம்தேதிக்குள் விளக்கம் அளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பட்டானூர் தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் கடந்த 17ம்தேதி நடந்தது. இந்த பொதுக்குழுவில், ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்நிலையில் தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் குழு உறுப்பினர்களான தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், வந்தவாசி முன்னாள் எம்.பி. துரை, தர்மபுரி நெடுங்கீரன், சேலம் சதாசிவம், மாநில மகளிர் அணி செயலாளர் தஞ்சாவூர் பானுமதி, ஆடுதுறை ம.க.ஸ்டாலின், திருமலை குமாரசாமி ஆகிய 8 பேர் பங்கேற்றனர். அவர்களுடன் ராமதாஸ் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்குபின் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உறுப்பினர்களில் ஒருவரான அருள் எம்எல்ஏ தகவல் தெரிவிப்பார் என்றார்.
அதன்பிறகு அருள் எம்எல்ஏ கூறுகையில், கடந்த 17ம்தேதி நடைபெற்ற மாநில பொதுக்குழு சிறப்பு கூட்டத்தில் செயல்தலைவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நடவடிக்கைக்காக கட்சி தலைமைக்கு வரப்பெற்று, அதில் 16 குற்றச்சாட்டு பொதுக்குழுவில் முன்வைக்கப்பட்டு அவை கட்சியின் அமைப்பு விதி 23ன்படி ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு வழங்கப்பட்டது. அங்கு உரிய விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்கும் கடிதத்தை செயல்தலைவர் அன்புமணிக்கு இன்று (நேற்று) அனுப்பி வைப்பதென முடிவு செய்திருக்கிறோம். விதி19ன்படி கட்சியின் அமைப்பு செயலாளர், செயல் தலைவருக்கு இதனை அனுப்பி வைப்பார். விளக்கம் மற்றும் ஆவணங்கள் ஏதேனும் இருப்பின், 31ம் தேதிக்குள் நேரிலோ அல்லது மேற்கண்ட முகவரிக்கு கடிதத்தின் வாயிலாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என்றார். உரிய விளக்கம் அளிக்காவிடில் செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
* குறுக்கு வழியில் பதவியை பிடித்தவர் பாலு: அருள் எம்எல்ஏ
சேலம் அருள் எம்எல்ஏ கூறுகையில், பாமக குறித்து பேச பாலுவுக்கு எந்த தகுதியும் இல்லை. பல்வேறு கட்சிகளில் சுற்றித்திரிந்து ராமதாசுக்கும், அன்புமணிக்கும் சதிசெய்து குறுக்கு வழியில் பதவியை பிடித்தவர் பாலு. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாலுவின் கருத்துக்களை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள வேண்டாம். பாமகவிற்கும், பாலுவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அன்புமணிக்கு 28.05.2025ம் தேதியோடு தலைவர் பதவி முடிந்துவிட்டது. ஒருபொய்யை மாற்றி மாற்றிக் கூறினால் உண்மையாகி விடாது. பாலு பொய் மூட்டையை அவிழ்த்து விடுகிறார். அன்புமணியுடன் இருக்கும் 3 பாமக எம்எல்ஏக்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதிமுகவிலிருந்து இரண்டு முறை துரத்தப்பட்ட பாலு, ராமதாசுக்கு துரோகமிழைக்க எப்படி மனசு வந்தது என்றார்.
* பஞ்சவடியில் மகளுடன் சவுமியா சாமி தரிசனம்
அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகம் தலைவருமான சவுமியா நேற்று காலை வானூர் அருகே உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து சாமிதரிசனம் செய்தார்.
இதேபோல் தைலாபுரம் அருகே உள்ள ஒழிந்தியாம்பட்டு அரசாளீஸ்வரர் கோயிலுக்கும் தனது இளைய மகள் மற்றும் உறவினர்களுடன் சென்ற சவுமியா, அங்கு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.
