பாப்பிரெட்டிப்பட்டி, ஆக.18: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே எலந்தகொட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்(69). கூலி தொழிலாளியான இவர், காளிப்பேட்டையில் செயல்பட்டு வரும் உரம் தயாரிப்பு ஆலையில், கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். கடந்த 9ம் தேதி வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஆலையில் உள்ள பாய்லர் திடீரென வெடித்தது. அதிலிருந்து தெறித்து ஆசிட் பெருமாள் மீது விழுந்ததில், உடல் கருகி படுகாயமடைந்தார். இதையடுத்து, அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
