கடலூர், ஜன. 1:காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த ஹென்றிதாஸ்(56) என்பவர் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், உளுந்தூர்பேட்டை அருகே குச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் திருமலை(32) என்பவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், எனது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2023ம் ஆண்டு ரூ.5,13,000 பணத்தை பெற்றுக்கொண்டு இதுவரை வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வருவதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு டிஎஸ்பி ரகுபதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தினி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், திருமலை, ஹென்றி தாஸ் மகனுக்கு சிங்கபூரில் சிவில் டிப்ளமோ மெக்கானிக்கல் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5,13,000 பெற்றுக்கொண்டு, அதில் ரூ.3,65,000 திருப்பி கொடுத்து விட்டதாகவும்,
அதேபோல காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த கிளைமண்டராஜ் என்பவரின் மகனுக்கு வேலைக்காக ரூ.5,00,000 பணம் பெற்றுக்கொண்டு, அதில் ரூ.2,10,000 திருப்பி கொடுத்து விட்டதாகவும், ஏசுராஜ் என்பவரின் மகனுக்கு வேலைக்காக ரூ.5,00,000 பெற்று கொண்டு, அதில் ரூ.50,000 மட்டும் திருப்பி கொடுத்துவிட்டதாகவும் ஆக மொத்தம் ரூ.8,88,000 பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து திருமலையை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
