சங்கராபுரம், ஜன. 8: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இடத்தின் பட்டாவை தனிநபர் பெயரில் பட்டா மாற்றம் செய்ததை கண்டித்து பொதுமக்கள் சங்கராபுரம்- புதுப்பட்டு சாலையில் அமர்ந்தும் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் பிரதாப் குமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
