புதுச்சேரி, ஜன. 3: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் தலைமை செயலர், டிஜிபி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அப்பா பைத்தியம் சாமியின் தீவிர பக்தராக வலம் வருபவர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. கோரிமேட்டில் உள்ள தனது வீட்டையொட்டி அப்பா பைத்தியம் சுவாமிக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறார். சனிக்கிழமை தோறும் அங்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இதனால் முதல்வரிடம் சிறப்பு ஆசிர்வாதம் வாங்க விரும்புபவர்களில் பெரும்பாலானோர் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு செல்வதைதான் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்த ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உள்துறை இணை அமைச்சர் நித்தியனாந்த் ராய் ஆகியோர்கூட அங்கு சென்றுதான் முதல்வரிடம் எலுமிச்சை பழம் வழங்கி ஆசி பெற்றனர். உலகம் முழுவதும் 2026 ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், எலுமிச்சை பழம், நினைவுப்பரிசு வழங்கியும் வாழ்த்து பெற்றனர். தலைமைச் செயலர் சரத் சவுகான், டிஜிபி ஷாலினி சிங் மற்றும் அரசு செயலர்கள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் முதல்வருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தனர். இதுதவிர சட்டசபை உள்ளிட்ட பல்ேவறு அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் முதல்வர் ரங்கசாமிக்கு எலுமிச்சைப் பழம் கொடுத்து அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். வழக்கமாக மற்ற மாநில முதல்வர்களை புத்தாண்டு சந்திக்கும் விஐபிக்கள் சால்வை, பூங்கொத்து, நினைவுபரிசு கொடுத்து வாழ்த்து பெறுவது வழக்கம். ஆனால் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்திக்கும் விஐபிக்களும், அரசு ஊழியர்களும், பொதுமக்களும் எலுமிச்சை பழம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
