×

திருக்குவளை, சாட்டியக்குடி பகுதியில் அறுவடையான நெல் மணிகளை காய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

* ஈரப்பதத்தால் விற்க முடியாமல் தவிப்பு

* மழை விட்டு வெயில் அடிப்பதால் திருப்தி

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் அறுவடை செய்த குறுவை நெல் மணிகளை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஈரப்பதத்தால் விற்க முடியாமல் தவித்து வந்தனர். தற்போது மழை விட்டு வெயில் அடிப்பதால் திருப்தி அடைந்துள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை, சாட்டியக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பின்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயிர்கள் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். அப்போது விட்டு, விட்டு கனமழை பெய்தது. இதனால் அறுவடை செய்த நெற் பயிர்கள் மழையில் நனைந்தது. இருப்பினும் விவசாயிகள் பெறும் சிரமத்திற்கு இடையே மனம் தளராமல் அறுவடை பணியை மேற்கொண்டனர்.

இவ்வாறு அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சாலையோரங்களில் நெல்மணிகளை தூவி காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 17 சதவீத ஈரப்பதம் வரை உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்வதால் 17 சதவீத ஈரப்பதத்திற்கு மேல் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரப்பதம் கூடுதலாக உள்ள நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே விவசாயிகள் இயற்கை ஒத்துழைத்து தொடர்ந்து வெயில் காட்டுவதால் அறுவடை செய்த நெல்லை காயவைக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக சாட்டியகுடி- மற்றும் திருக்குவளை செல்லும் பிரதான சாலை, மேலப்பிடாகை-, கொளப்பாடு செல்லும் சாலைகளில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை கொட்டி உலர வைத்து வருகின்றனர்.

அவ்வாறு காயந்த நெல்களை தனி தனி மூட்டைகளாக கட்டிக் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து திருக்குவளை பகுதியைச் சேர்ந்த விவசாயி பன்னீர் கூறியதாவது: பின்பட்டத்தில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் மழையில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் மனம் தளராமல் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தோம். மழை விட்டு வெயில் அடிப்பதால் அறுவடை செய்த நெல்லை காயவைத்து கொள்முதல் நிலையத்தில் விற்று வருகிறோம். இதனால் திருப்தி ஏற்பட்டுள்ளது என்றார்.

The post திருக்குவளை, சாட்டியக்குடி பகுதியில் அறுவடையான நெல் மணிகளை காய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Thirukkuvala ,Chatiyakudi ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகூரில் ஹனிபா இல்லம் அமைந்துள்ள தெரு,...