×

சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு இன்று (5ம் தேதி) முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக கலையரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.

சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பினை உலகுக்கு அறிவித்த முன்னாள் இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் திருவுருச்சிலைக்கு அடிக்கல் நாட்டியும், சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டு குறியீடுகளும், ஒரு வடிவவியல் ஆய்வு என்ற நூலினை வெளியிட்டும் விழா பேருரையாற்றுகிறார். சிந்துவெளி நாகரிகம் முதன்முதலில் 1924ம் ஆண்டு செப்டம்பர் 20ம் நாளன்று உலகுக்கு அறிவிக்கப்பட்டது. அதனை ‘தி இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ்’ என்ற இதழில் சர் ஜான் மார்ஷல் அறிவித்தார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலகுக்கு அறிவிக்கப்பட்ட சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நமது கடந்த கால வரலாற்றை பற்றிய புரிதலை மாற்றியது.

இந்த கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்து ஆய்வு மையமும் இணைந்து, மூன்று நாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கை ஒருங்கிணைத்து நடத்துகின்றன. மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த கருத்தரங்கில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 24 ஆய்வாளர்கள் – தொல்லியலாளர்கள் சிந்துவெளி நாகரிகம் மற்றும் இந்திய துணை கண்டத்தின் இதர நாகரிகங்கள், பண்பாடுகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் தங்களது ஆய்வுரைகளை வழங்க உள்ளனர். மூன்று நாட்கள் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் பொதுமக்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் நேரலையில் ஒளிப்பரப்பப்பட உள்ளன.

The post சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Indus Valley Civilization Centenary Discovery International Seminar ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Department of Archaeology ,Government of Tamil Nadu ,
× RELATED சென்னையில் கழிவுநீர் அகற்றும்...