அவனியாபுரம்: மதுரையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கு உபகரணங்கள் வழங்கும் விழாவில், தமிழில் பேசிய அதிகாரிக்கு மாற்றாக இந்தியில் பேச மற்றொருவர் அழைக்கப்பட்டார். ஒன்றிய அமைச்சர் பங்கேற்ற விழாவில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை, வில்லாபுரத்தில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான மையத்தில் உலக பார்வையற்றோர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய சமூக நீதி அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் விரேந்தர குமார், இத்துறையின் ஒன்றிய இணை செயலாளர் ராஜீவ் சர்மா, தேசிய இயக்குநர் நச்சி கோடா ரவுட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இம்மையத்தில் ஓஎன்ஜிசி நிறுவன நிதி பங்களிப்பில் ரூ.26 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் 124 பயனாளிகளுக்கு அதிநவீன கருவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஓஎன்ஜிசி பொது மேலாளர் மாறன், தென் மண்டல இயக்குநர் ஜெயசீலி புளோரா, மதுரை மேலாளர் அறிவழகன், மாற்றுத்திறன் மையத்தின் இயக்குநர் நடேஷ் நித்தியானந்தா, பயிற்சியாளர் உமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே வில்லாபுரத்தில் ஒன்றிய அரசின் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் மறுவாழ்வு மையம், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் முதல் இயங்கி வருகிறது. இருப்பினும் இம்மையம் இயங்கி வரும் அதே கட்டிடத்தை ஒன்றிய அமைச்சர் வீரேந்திரகுமார் நேற்று மீண்டும் திறந்து வைத்தது போல் விழா நடத்தியது குழப்பத்தை ஏற்படுத்தியது.
அடுத்ததாக ஓஎன்ஜிசி நிறுவன பொது மேலாளர் மாறன், நிதி பங்களிப்பு குறித்து தமிழில் பேசினார். அப்போது திடீரென இடைமறித்த ஒன்றிய இணை செயலாளர் ராஜீவ் சர்மா, இத்தகவல்களை இந்தியில் தெரிவிக்குமாறு மற்றொரு நபரை அழைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாறன், எனக்கு தமிழுடன், இந்தி, ஆங்கிலத்திலும் பேசத்தெரியும் என்று கூறிவிட்டு அதன்படி மூன்று மொழிகளிலும் பேசினார். விழா மேடையில் தமிழில் பேசிய அதிகாரியை ஒன்றிய அமைச்சர் முன்னிலையில் இந்தியில் பேசும்படி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
The post ஒன்றிய அமைச்சர் பங்கேற்ற விழாவில் தமிழில் பேசிய அதிகாரிக்கு அவமதிப்பு: இந்தி பேசுபவருக்கு அழைப்பு appeared first on Dinakaran.