சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலனுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், செல்போனில் வீடியோ பதிவு செய்த நடைபாதை பிரியாணி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தங்கும் விடுதிகள் உள்ளன. இங்குள்ள விடுதியில் தங்கியிருந்து கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி, மெக்கானிக் இன்ஜினியரிங் பிரிவில் 4ம் ஆண்டு படித்துவரும் மாணவர் ஒருவவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.
கடந்த திங்கள்கிழமை அந்த மாணவரும் மாணவியும் விடுதியில் உள்ள உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின்னர் அங்குள்ள மரங்கள் நடுவே மறைவான இடத்தில் இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு வந்த வாலிபர், அவர்கள் தனிமையில் இருப்பதை பார்த்ததும் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பிறகு அந்த வாலிபர், மாணவியுடன் இருந்த மாணவரை சரமாரியாக அடித்து விரட்டிவிட்டு, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து அவர், ‘நான் எப்போது அழைத்தாலும் நீ வரவேண்டும். இல்லையென்றால் செல்போனில் பதிவு செய்துள்ள உனது வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன்’’ என்று மாணவியை மிரட்டியுள்ளார். இதன்பிறகு தங்களுக்கு நடந்தது பற்றி இருவரும் ஆலோசனை நடத்திவிட்டு இறுதியாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் மீது புகார் கொடுக்க முடிவு செய்து, கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜை நேற்று முன்தினம் இரவு சந்தித்து புகார் கொடுத்தனர். உடனடியாக உதவி கமிஷனர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து, வீடியோ பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து புகார் அளித்த காதலர்களிடம், வன்கொடுமையில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இரவு நேரம் என்பதால் எங்களால் அடையாளம் காட்டி முடியவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் செல்போன் டவர் மூலம் வாலிபரை தேடி வந்தனர். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியை போலீசார் அரசு மருத்துவ பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்து, அவருக்கு மனநல நிபுணர்கள் உதவியுடன் கவுன்சிலிங் அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே பலதரப்பு விசாரணைக்கு பிறகு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவர் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (37) என்றும், அவர் மீது 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இவர் மீது கடந்த 2011ம் ஆண்டு பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. மேலும், ஞானசேகரன் அப்பகுதியில் நடைபாதை ஒன்றில் பிரியாணி கடை நடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஞானசேகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவனை அதிரடியாக கைது செய்தனர். அவனிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து மாணவியின் வீடியோ தொடர்பாக விசாரித்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
The post காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை பிரியாணி கடை உரிமையாளர் கைது: அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என வீடியோ எடுத்து மிரட்டல்; அண்ணா பல்கலை வளாகத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.