வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகியை கடத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன். மதுரை நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகியான இவர் காரில் நாமக்கல் சென்று கொண்டிருந்தார். வாடிப்பட்டி அருகே அவரது செல்போன் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டு மாயமானார். இது தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி பகுதியில் நேற்று தாறுமாறாக ஓடிய காரை மடக்கி பிடித்து பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர். இதில் காரில் 5 பேர் கும்பல் கார்த்திகேயனை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சாணார்பட்டி போலீசார் அவர்களை வாடிப்பட்டி போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், கார்த்திகேயனை கடத்தியது திருச்சியை சேர்ந்த பசுபதி(29), அவரது நண்பர்கள் முத்துக்குமார்(31), கார்த்திக்(30), வீரகணேசன்(30), ஆனந்த் குமார் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், திருச்சியை சேர்ந்த பசுபதி, அதே பகுதியைச் சேர்ந்த நியோமேக்ஸ் நிறுவன விற்பனை மேலாளர் தேவா என்பவர் கூறியதன் பேரில் ரூ.8 லட்சம் முதலீடு செய்தார். ஆனால், நிறுவனம் முடங்கியதால் பணம் மொத்தமும் பறிபோனது.
இதனால் அதிர்ச்சியடைந்த பசுபதி, பணத்தை மீட்பதற்காக தனது நண்பர்கள் சிலருடன், மதுரை வந்து நியோமேக்ஸ் நிர்வாகியான கார்த்திகேயனை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து பசுபதி உள்ளிட்ட 5 பேரையும் வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர். இதில் ஆனந்தகுமார், வீரகணேஷ் இருவரும் மலைப்பகுதியில் தப்பிக்க முயன்றபோது தடுமாறி விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ரூ.3 லட்சம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள நியோமேக்ஸ் நிறுவன விற்பனை மேலாளர் தேவாவை தேடி வருகின்றனர்.
The post வாடிப்பட்டி அருகே நியோமேக்ஸ் நிர்வாகியை கடத்திய 5 பேர் கைது: மேலும் ஒருவருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.