×

மோட்டார் வாகன ஆய்வாளர் ஆபீசில் நிறுத்திய போலி பதிவு எண் கொண்ட சொகுசு பஸ் திருட்டு: குடியாத்தத்தில் பரபரப்பு

குடியாத்தம்: வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக சுற்றுலா சொகுசு பஸ் ஒன்று, பைக்கிற்கான பதிவு எண்ணுடன் சட்ட விரோதமாக இயக்கப்பட்டு வருவதாக சென்னை போக்குவரத்து ஆணையரக அலுவலகத்திற்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து, ஆணையரக அலுவலகம் உத்தரவின்பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தீவிர வாகனத்தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி, குடியாத்தம் மோட்டார் வாகன முதல் நிலை ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேலூரில் இருந்து பள்ளிகொண்டா நோக்கி வந்த சொகுசு பஸ்சை தடுத்து நிறுத்தினர். ஆனால், பஸ் நிற்காமல் மீண்டும் வேலூர் நோக்கி சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரி சில கி.மீ. தூரம் காரில் விரட்டி சென்று பஸ்ஸை மடக்கி பிடித்தார். விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அந்த பஸ் போலி பதிவு எண்ணுடன் இயக்கப்பட்டு வருவது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த சொகுசு பஸ்ைச பறிமுதல் செய்து குடியாத்தம் அடுத்த காந்தி நகரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்தனர். இதற்கிடையில், நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த சொகுசு பஸ்சை மர்ம ஆசாமிகள் 2 பேர் திருடிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து சொகுசு பஸ்சை திருடிச்சென்றதாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

The post மோட்டார் வாகன ஆய்வாளர் ஆபீசில் நிறுத்திய போலி பதிவு எண் கொண்ட சொகுசு பஸ் திருட்டு: குடியாத்தத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Transport Commission ,Vellore ,Tirupathur ,Ranipette ,Office of the Commissioner ,Motor Vehicle Inspector ,Dinakaran ,
× RELATED சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை...