ஊட்டி: கேத்தி பாலாடா – கெந்தளா இடையே புறவழிசாலையில் காட்டேரி அணை அருகே பக்கவாட்டு மண் சுவர் அடிக்கடி இடிந்து பாறைகளுடன் உருண்டு விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் – மஞ்சூர் சாலையில் கெந்தளா பகுதியில் இருந்து கேத்தி பாலாடா, கொல்லிமலை, எல்லநள்ளி பகுதிக்கு செல்ல சாலை உள்ளது. இச்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனிடையே மேட்டுப்பாளையத்தில் இருந்து பர்லியார் வழியாக ஊட்டி, கூடலூருக்கு பயணிப்போர் நெரிசலின்றி செல்ல வசதியாக குன்னூருக்கு 3 கிலோ மீட்டருக்கு முன்பாக காட்டேரி பகுதியில் இருந்து குந்தா சாலையில் சேலாஸ், கெந்தளா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, காந்திப்பேட்டை, லவ்டேல் வழியாக ரூ.46 கோடி மதிப்பில் புறவழி சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்காக பல இடங்களிலும் சாலை விரிவாக்க பணிகள் என்ற பெயரில் சுமார் 20 அடிக்கும் மேல் உயரமுள்ள மண் திட்டுகள் செங்குத்தாக ெவட்டப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் மண் திட்டுகள் வெட்டப்பட்ட இடங்களில் தடுப்புசுவர்கள் கட்டப்படவில்லை. இந்நிலையில் இச்சாலையில் காட்டேரி அணை அருகே வலதுபுறத்தில் பக்கவாட்டில் பல அடி உயரத்திற்கு மண் சுவர் இடிக்கப்பட்ட நிலையில், தடுப்புசுவர் இல்லாததால் இப்பகுதியில் அடிக்கடி மண் திட்டுகள் இடிந்து பாறைகளுடன் சாலைகளில் விழுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர். பாறைகள் விழுவது குறித்து அறிந்தவுடன் உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் மண் மற்றும் பாறைகளை அப்புறபடுத்துவது தொடர்கதையாக உள்ளது. எனவே இப்பகுதியில் தடுப்புசுவர் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
The post பாறைகளுடன் இடிந்து விழும் மண் திட்டுகளால் அபாயம் appeared first on Dinakaran.