காஞ்சிபுரம்: பிடிஓ அலுவலகம் எதிரே, சிறுகாவேரிபாக்கம் சுப்புரத்தின நகரில் முறையாக கட்டப்படாமல் மேடாக தூக்கி கட்டியுள்ள மழைநீர் வடிகால்வாயில் தண்ணீர் வெளியேறாததால், கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளதால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் சுப்புரத்தின நகர் உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்காக ஊரக வளர்ச்சித்துறை மூலம் 15வது நிதி மானியம் 2022-23ம் ஆண்டுக்காக ரூ.5.40 லட்சம் செலவில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது.இவ்வாறு, புதியதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய்யானது பள்ளத்தை நோக்கி மழைநீர் வெளியேறும் வகையில் முறையாக கட்டாமல் மேடு தூக்கி கட்டப்பட்டுள்ளது. இதனால், மழைநீர் வெளியாகாமல் சுப்புரத்தின நகர் எல்லையில் முட்டி நிற்பதால், இந்த மழைநீர் வடிகால்வாயில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது.
இந்த, கொசுக்கள் தொல்லையால் பகல் நேரங்களில் வீடுகளில் இருக்க முடியாமலும், இரவு நேரங்களில் தூங்க முடியாமாலும் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைநீர் வடிகால்வாயிலிருந்து மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற முடியாமல் மின்கம்பம் அருகில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், மழைநீர் கால்வாய் தண்ணீர் செல்லும் பகுதியில் சிறுபாலம் ஒன்று கட்டப்பட்டது. அந்த, சிறுபாலம் கட்டிய சில தினங்களில் உடைந்து தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இந்த, மழைநீர் கால்வாய் தண்ணீர் நெட்டேரியில் போய் சேர வேண்டும்.
ஆனால், இந்த சிறுபாலம் உடைந்து நிற்பதால் தண்ணீர் போக முடியாமல் சுப்புரத்தினம் நகர் தெற்கு பகுதியில் தேங்கி நிற்கிறது. புதியதாக கட்டப்பட்ட கால்வாய் மூலம் எந்தவித பயனும் இல்லாமல் மழைநீர் வெளியேற முடியாமல் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் மூலம் குடியிருப்பு வாசிகள் நலன் கருதியும் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாயில் இருந்து தாழ்வாக நீர் வெளியேறு வகையில் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பிடிஓ அலுவலகம் எதிரே சிறுகாவேரிபாக்கம் சுப்புரத்தின நகரில் உயரமாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய்: தண்ணீர் வெளியேறாமல் கொசு உற்பத்தி மையமாக மாறியது; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.