×

அம்பேத்கரை அவமதித்து பேசிய உள்துறை அமைச்சரை கண்டித்து திமுக, விசிக ஆர்ப்பாட்டம், ரயில் மறியல்: விசிக நகர செயலாளர் காலில் தீக்காயம்

காஞ்சிபுரம்: அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, காஞ்சிபுரம் ரயில்வே ரோடு அம்பேத்கர் சிலை அருகில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமைச்சர் பதவியில் இருந்து விலக்க வேண்டும். தேசிய தலைவர்களை அவமதித்ததற்கான வழக்குப்பதிவு அமித்ஷா மீதுசெய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார் குமணன், படுநெல்லி பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், மகளிர் அணி செல்வி, பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன் உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதேபோல, காஞ்சிபுரம் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர நிர்வாகி நாதன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் மதியழகன் கண்டித்து பேசினார். இதில், துணை மேயர் குமரகுருநாதன், பொறுப்பாளர் சீனிவாச ராகவன், நிர்வாகிகள் பத்மநாபன், லோகநாதன், அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி ஊராட்சி, பாலுசெட்டிசத்திரம் அம்பேத்கர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிஎம்.குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.எஸ்.மாரிமுத்து, இரா.இளஞ்செழியன், சசிக்குமார், பிஎன்.ரவி, நா.கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டு ஒன்றிய அமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்கள்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அம்பேத்கர் சிலை அருகே, உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் நகர திமுக சார்பில், அம்பேத்கரை அவமதிப்பு செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்திரமேரூர் செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், திமுக உட்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றிய விசிக மற்றும் புரட்சி பாரதம் கட்சி ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக மாவட்ட செயலாளர் தென்னவன் தலைமை தாங்கினார். திருப்போரூர் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமீத்ஷாவை கண்டித்து வி.சி.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், சிறுதாவூர் ஊராட்சி மன்ற தலைவர் வேதா அருள் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். பின்னர், திடீரென அனைவரும் ஓஎம்ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே பேருந்து நிலையம் அருகே அமீத்ஷாவின் உருவபொம்மை எரித்து கோஷம் போட்டனர்.

மதுராந்தகம்: அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விசிக கட்சியினர் ரயில் மறியல், சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மதுராந்தகம் அம்பேத்கர் சிலை அருகில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையிலும், மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார், ஒன்றியக் குழு பெருந்தலைவர் கண்ணன், நகர செயலாளர் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் கோகுலக்கண்ணன், ஒன்றிய செயலாளர் தம்பு, சத்யசாய், சிவக்குமார், பேரூர் செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, எழிலரசன் ஆகியோர் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் திமுக, விசிக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் படங்களை கையில் ஏந்தியபடி மதுராந்தகம் தெற்கு பைபாஸ் சாலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட கவுன்சிலர்கள் மாலதி, வசந்தா கோகுல கண்ணன், ராஜாராம கிருஷ்ணன், நகர மன்ற துணை தலைவர் சிவலிங்கம், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், அவைத்தலைவர் சசிகுமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, செய்யூர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் பேரூர் செயலாளர் மோகன்தாஸ், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் தசரதன், அவைத்தலைவர் இனிய அரசு உள்ளிட்ட திமுக கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சித்தாமூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சூனாம்பேடு கிராமத்தில் அம்பேத்கர் சிலை முன்பாக உள்துறை அமைச்சரை கண்டித்து ஒன்றிய செயலாளர் சிற்றரசு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம்: நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து மதுராந்தகம் நகர ரயில் நிலையத்தில் நேற்று விசிக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு கட்சியின் தொகுதி தலைவர் பாக்கம் பேரறிவாளன் தலைமை தாங்கினார். அப்போது, திருப்பதியில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற பயணிகள் ரயிலை மதுராந்தகம் ரயில் நிலையத்தில் வழிமறித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் போலீசார் சமரச பேச்சு வார்த்தைக்கு பிறகு கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூர், ஒன்றிய திமுக சார்பில் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அம்பேத்கரை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தெற்கு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய்காந்தி, இளைஞர் அணி நிர்வாகி சுகுமாரன் மற்றும் விசிக சார்பில் மாவட்ட நிர்வாகி பாசறை செல்வராஜ், பேரூர் செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட திமுக, விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருக்கழுக்குன்றம்: செய்யூர் சட்டமன்ற தொகுதி புரட்சி பாரதம் கட்சி சார்பில், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பி, அங்குள்ள இசிஆர் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு: நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அசிங்கப்படுத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக மறைமலைநகரில் செங்கல்பட்டு மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தென்னவன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷமிட்டவாறு அமித் ஷாவின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் முன்பு 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தியும், அவரது சர்ச்சை பேச்சை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன செங்கல்பட்டில் வழக்கறிஞர் திடீரென சாலை மறியல் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

* உருவபொம்மை எரிப்பு
காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, அவரது உருவபொம்மை எரித்து விசிகவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பேத்கர் குறித்து சர்ச்சைக்கூறிய கருத்தை பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமிஷாவை கண்டித்து, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர், திடீரென சாலையின் நடுவே உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவபொம்மையை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விசிகவின் நகர செயலாளர் பாலாஜி திடீரென எரிந்துக்கொண்டிருந்த உருவ பொம்மையை மிதிக்க முற்பட்டார். இதில், அவரது காலில் தீப்பற்றி எரிந்ததால், விசிக பிரமுகர்கள் அலறியடித்து ஓடினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post அம்பேத்கரை அவமதித்து பேசிய உள்துறை அமைச்சரை கண்டித்து திமுக, விசிக ஆர்ப்பாட்டம், ரயில் மறியல்: விசிக நகர செயலாளர் காலில் தீக்காயம் appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,VISIKA ,VISIKA CITY SECRETARY ,MINISTER ,INSULTING ,AMBEDGARI ,Kanchipuram ,southern district ,Kanchipuram Railway Road Ambedkar ,Union Interior Minister ,Amitshah ,Ambedkar ,Southern ,District ,K. Sundar MLA ,Visika City ,Calil ,Dinakaran ,Home Minister ,
× RELATED முதல்வர் தலைமையில் 22ம் தேதி திமுக செயற்குழு கூட்டம்