சியோல்: ராணுவ சட்டம் அமல்படுத்திய தென் கொரியா அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பதவி நீக்க தீர்மானம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து யூன் யோல் நீக்கப்பட்டுள்ளார். தென் கொரியா அதிபர் யூன் சுக் யோல் கடந்த 3ம் தேதி திடீரென ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார். அரசு எதிர்ப்பு சக்திகள் மற்றும் வடகொரியாவின் அச்சுறுத்தல் காரணமாக ராணுவ சட்டத்தை அமல்படுத்தியதாக கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகளும், உட்கட்சியிலேயே பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் அவசர வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் ராணுவ சட்டத்தை அதிபர் யோல் வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிபர் யோலுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று நடந்தது. மொத்தமுள்ள 300 உறுப்பினர்களில் 200 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், 204 பேர் தீர்மானத்தை ஆதரித்தும், 85 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.
இதன் மூலம் தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தகட்டமாக, அரசியலமைப்பு நீதிமன்றம் அதிபர் யோலின் எதிர்காலம் குறித்து 180 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிவெடுக்கும். அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை நீதிமன்றம் உறுதி செய்ததும், 90 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அதுவரை, பிரதமர் ஹன் டெக் சூ பொறுப்பு அதிபராக செயல்படுவார்.
* மீண்டும் வருவேன்
தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அதிபர் யூன் யோல், ஒருபோதும் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும், பதவிநீக்கம் தற்காலிகமானது என்றும் அதுவரை அரசு நிர்வாகத்தை முறைப்படி நடத்த வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
The post ராணுவ சட்டம் அமல் எதிரொலி தென் கொரிய அதிபர் பதவி நீக்கம்: நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.