×

பெஞ்சல் புயல் காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுது விவசாயிகள் பாத்திரத்தில் நாற்றுகளுக்கு தண்ணீர் இறைக்கும் அவலம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயில் அருகே பெஞ்சல் புயல் காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுதாகி 10 நாட்களாகியும் விவசாயிகள் நாற்றுப்பயிறுக்கு பாத்திரத்தில் தண்ணீர் இறைத்து ஊற்றும் அவலம் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிங்கபெருமாள் கோயில் அடுத்த கருநிலம் கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் ஏரிப்பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தின் மூலம் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கிணற்று பாசனத்திற்கு சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக இந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து கடந்த 10 நாட்களாக மின்சாரம் துன்டிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை மின்சாரம் வழங்கப்படாததால் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, சம்பா நெல் தற்போதைய சீதோஷ்ண நிலையில் அந்த குறிப்பிட்ட பருவத்தில் நாற்று நடக்கூடிய சரியான நேரத்தில் பெஞ்சல் புயல் காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், மின் மோட்டார் பயன்படுத்த முடியாமல் விவசாயத்திற்கு தண்ணீர் இறைக்க முடியவில்லை. அதனால் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ஏரி மற்றும் கிணற்றுப்பாசன விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பெரும்பாலான விவசாயிகள் தயார்நிலையில் வைத்திருந்த நெல்விதைகள் வீணாகி வருகிறது. மின்சாரம் இல்லாததால் ஒருசில விவசாயிகள் கிணற்றில் இருந்து பாத்திரங்கள் வாயிலாக நாற்றுப்பயிருக்கு தண்ணீர் இறைக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் புகார் அளித்தோம். அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இதுவரை டிரான்ஸ்பார்மர் பழுது பார்க்கப்படவில்லை என கூறுகின்றனர். அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று அறியாத விவசாயி ஒருவர் கிணற்றிலிருந்து தண்ணீரை வயலுக்கு இறைக்கும் வீடியோ தற்பொழுது சமூக வளைத்தளங்களில் வைராலாகி வருகிறது.
இந்த பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post பெஞ்சல் புயல் காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுது விவசாயிகள் பாத்திரத்தில் நாற்றுகளுக்கு தண்ணீர் இறைக்கும் அவலம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Benjal ,Chengalpattu ,Singaperumal ,Singaperumal… ,Dinakaran ,
× RELATED பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட 156 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்