காஞ்சிபுரம்: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று காவலான்கேட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டடிருந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்தி நிறுத்தினர். அப்போது, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அதிமுகவினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், 350க்கும் மேற்பட்ட அதிமுகவினரை, போலீசார் கைது செய்து பேருந்தில் அழைத்துச்சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த, ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், பகுதி செயலாளர்கள் பாலாஜி, கோல்டு மோகன், ஜெயராஜ், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுராந்தகம் தேரடி வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையிலும், நகரச் செயலாளர் சரவணன் முன்னிலையிலும் நேற்று காலை நடைபெற்றது.
தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது அங்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 290 பேரை கைது செய்து வேனில் ஏற்றி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாலை 7 மணியளவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
The post ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது appeared first on Dinakaran.