குன்றத்தூர்: பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகனை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியது. குன்றத்தூர் அருகே பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா. இவரது மகன் தினேஷ்பாபு (35). இவர், கடந்த 21ம் தேதி பொழிச்சலூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோயிலுக்குள் வந்த பொழிச்சலூர் விநாயகா நகர், மாசிலாமணி தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சரவணன் என்பவரை சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
பதிலுக்கு சரவணனும், தினேஷ்பாபுவை தாக்கினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் போலீசார், இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜாவின் மகன் தினேஷ் பாபு, மாற்றுத்திறனாளி நபர் சரவணனை தாக்கியதை கண்டித்து, நேற்று முன்தினம் பொழிச்சலூர் மற்றும் பல்லாவரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
தமிழ்நாடு ஜனநாயக மக்கள் நல முன்னேற்ற சங்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரில், ஆதிக்க சாதி வெறியோடு, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சரவணனை சாதி பெயரை சொல்லி, எட்டி உதைத்து தாக்கிய தினேஷ் பாபுவை ‘சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடை’ என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஊராட்சி மன்ற தலைவரின் மகனை கண்டித்து போஸ்டர்: பொழிச்சலூரில் பரபரப்பு appeared first on Dinakaran.