×

கன்னியாகுமரி கடலில் மிதந்த சுற்றுலா பயணி உடல் அடையாளம் தெரிந்தது

 

கன்னியாகுமரி, டிச. 11: கன்னியாகுமரி கடலில் தவறி விழுந்து இறந்த வடமாநில சுற்றுலா பயணி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அப்போது பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அருகே வாவத்துறை கடலில் ஆண் சடலம் மிதப்பதை சுற்றுலா பயணிகள் பார்த்தனர். இது குறித்து அவர்கள் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். இதையடுத்து அங்கு கடலில் துண்டில் வளைவு பகுதியில் மிதந்து கொண்டிருந்த ஆணின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து நடத்திய விசாரணையில் அவர் இமாச்சல பிரதேசம் மண்டி, சல்மசோரா பகுதியை சேர்ந்த பிரிஷ்லால் (67) என்பது தெரியவந்தது. இவர் தனது உறவினர்கள் உட்பட 50 பேருடன் கடந்த நவம்பர் 21ம் தேதி சுற்றுலா புறப்பட்டனர். பல ஊர்களை சுற்றி பார்த்துவிட்டு, கடந்த 8ம் தேதி கன்னியாகுமரி வந்து லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை சூரிய உதயத்தை பார்த்துள்ளனர். இந்நிலையில் திடீரென பிரிஷ்லாலை காணவில்லை. அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், வாவத்துறை கடலில் இறங்கியபோது, தவறி விழுந்து மூழ்கி இறந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து அவரது மனைவி உஷா (56) போலீசில் புகார் செய்துள்ளார். கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கன்னியாகுமரி கடலில் மிதந்த சுற்றுலா பயணி உடல் அடையாளம் தெரிந்தது appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,North State ,Himachal Pradesh ,Boombukar ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் கடலில் மிதந்த வடமாநில சுற்றுலா பயணி சடலம்