×

தன்னார்வலர் என்ற பெயரினை மாற்றி நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும்

*‘மக்களைத் தேடி’ மருத்துவ ஊழியர்கள் கலெக்டரிடம் மனு

நெல்லை : தன்னார்வலர் என்ற பெயரினை மாற்றி, நிரந்தர ஊழியர்களாக பணி அமர்த்த வேண்டும் என ‘மக்களைத் தேடி’ திட்ட மருத்துவ ஊழியர்கள் நெல்லை கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.‘மக்களைத் தேடி’ திட்ட மருத்துவ ஊழியர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை திரண்டு வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: சுய உதவிக்குழுக்கள் மூலமாக கடந்த கொரோனா காலக்கட்டத்திலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்கள் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம்.

இதில் தொற்றா நோய்கள் மற்றும் ரத்த அளவு, சர்க்கரை அளவு கண்டறிய குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். நாங்கள் மருந்து, மாத்திரைகளை பஸ்சில் எடுத்துச் செல்ல முடியாது. எனவே இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தியே அவைகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதற்கேற்றாற்போல் எங்களுக்கு ஊதியமும் இல்லை. போக்குவரத்திற்கும் சேர்த்து எங்களுக்கு ரூ.5 ஆயிரத்து 500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

சமீபகாலமாக எங்களை சிறுநீரக தொற்று, புற்றுநோய் ஆகியவற்றை தாண்டி தொற்று நோய்களுக்கும் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். மேலும் தன்னார்வலர் என்ற பெயரினை மாற்றி, நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும். பணிச்சுமைக்கேற்ப எங்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தன்னார்வலர் என்ற பெயரினை மாற்றி நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nellie ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகராட்சி குறைதீர்...