×

நெல்லை மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி காலி குடங்களோடு மக்கள் தர்ணா

*மேயர், துணை மேயர் தரையில் அமர்ந்து குறை கேட்டனர்

நெல்லை : நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார். உதவி கமிஷனர்கள் ஜான்சன் சாமுவேல், சந்திரமோகன், நாராயணன், மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் ராணி, உதவி செயற்பொறியாளர் பைஜூ, நிர்வாக அலுவலர் மீரான், சுகாதார ஆய்வாளர் இளங்கோ, முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி 5வது வார்டுக்குட்பட்ட திம்மராஜபுரம் பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக் கோரி கவுன்சிலர் ஜெகந்நாதன் தலைமையில் காலி குடங்களோடு கூட்டரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா நடத்தினர். இதைப் பார்த்த மேயரும், துணை மேயரும் தரையில் அமர்ந்து அவர்களின் கோரிக்கைகளை கனிவோடு கேட்டறிந்தனர்.

அப்பகுதி மக்கள் அளித்த மனுவில், திம்மராஜபுரம் பகுதியில் 2500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 10 தினங்களாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வரவில்லை.

பெண்கள், குழந்தைகள் குடிநீரின்றி மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அடிக்கடி வாடிக்கையாகி வருகிறது. தீப்பாச்சியம்மன் கோயில் குடிநீர் தொட்டிக்கு தண்ணீரை முறையாக ஏற்றுவது கிடையாது. எங்கள் வார்டுக்குட்பட்ட ஆண்டாள் தெரு, சப்பாணி மாடன் தெரு உள்ளிட்ட 6 தெருக்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11வது வார்டு மக்கள் கவுன்சிலர் கந்தன் தலைமையில் பொதுமக்ககள் அளித்த மனுவில், ‘‘எங்கள் வார்டுக்குட்பட்ட அப்பர்சாமி தெருவில் சிமென்ட் ரோடு அமைத்துத் தர வேண்டும். அத்தெருவில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. ரூ.6.15 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்ட நிலையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தி நகர் பொது நல அபிவிருத்தி சங்கத்தினர், செயலாளர் பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர் அப்பாத்துரை, செயற்குழு உறுப்பினர்கள் சவுந்தரராஜன், சரவணன், வைகுண்டம் ஆகியோர் அளித்த மனுவில், ‘‘பாளை சாந்தி நகரில் மணிக்கூண்டு அருகே 2வது பிரதான சாலையில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெளியேற வழியில்லை.

சாந்திநகர் முழுவதும் மழை நீர் வடிகால் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் 1வது தெரு முதல் 12 தெரு வரை கழிவு நீர், மழைநீர் தேங்கி தீவு போல் காட்சியளிக்கிறது. எனவே 2வது பிரதான சாலையில் புதிய வாறுகால் அமைத்து மழை நீர் தெருக்களுக்குள் செல்லாமல் இருக்க உரிய வழிவகை செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். சாந்திநகர் 4 மற்றும் 7வது தெருக்களில் தெருவிளக்கு எரிய நடவடிக்கை தேவை’’ என்றனர்.

10வது வார்டு வண்ணார்பேட்டை பரணி நகர் மக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை பணி முடிந்து விட்டது. ஆனால் இன்று வரை சாலை வசதி இல்லை. மழை காலங்களில் சாலையில் நடக்க சிரமமாக உள்ளது. எனவே சாலை அமைத்துத் தர வேண்டும். அங்கு தெரு நாய்கள் தொல்லையும் அதிகம் உள்ளதால் அவைகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்.

The post நெல்லை மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி காலி குடங்களோடு மக்கள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Nellie Corporation Grievance Meeting ,Mayor ,Deputy Mayor ,Nellai ,Nellai Corporation ,Ramakrishnan ,KR Raju ,Assistant Commissioners ,Johnson Samuel, ,Chandramohan ,Nellie Corporation ,Dinakaran ,
× RELATED மருத்துவம் மற்றும் மருத்துவம்...