×

மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றபோது சுற்றுலா பஸ்சில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி: அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகம்

ஆற்காடு: ஆற்காடு அருகே சுற்றுலா பஸ்சில் மின்சாரம் பாய்ந்து அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த வாணியம்பாடியை சேர்ந்த இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் வெங்கடாபுரம் கிராமத்திலிருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு விரதமிருந்து இருமுடி கட்டி நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் ஒரு சுற்றுலா பஸ் மற்றும் 2 வேன்களில் 90 பேர் புறப்பட்டனர். சுற்றுலா பஸ்சில் மட்டும் 10 ஆண்கள் மற்றும் வெங்கடாபுரம் சங்கர் மகள் அகல்யா, அவரது தாய் கலைவாணி, அக்கா கவுசல்யா உள்ளிட்ட 50 பக்தர்கள் இருந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு செய்யாறு பைபாஸ் சாலையில் முப்பதுவெட்டி பகுதி வளைவு அருகே அதிகாலை 4 மணியளவில் வந்தபோது டீ குடிப்பதற்காக டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி உள்ளார்.

அப்போது அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பி, பஸ்சின் மேல் பகுதியில் உரசி உள்ளது. அதேநேரம் அகல்யா (20) பஸ்சில் இருந்து படியில் இறங்குவதற்காக பக்கவாட்டு கம்பியை பிடித்துள்ளார். அந்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அகல்யா தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிலரையும் மின்சாரம் தாக்கி உள்ளது. ஆனால் காயம் ஏற்படவில்லை. அகல்யாவிற்கு அடுத்த மாதம் திருமணம் நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் குடும்பத்தினர் செய்து வந்த நிலையில் பஸ்சில் மின்சாரம் பாய்ந்து அவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பஸ்சை அஜாக்கிரதையாக இயக்கியதாக ஆற்காடு அடுத்த வளவனூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் காமராஜை(45) போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

The post மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றபோது சுற்றுலா பஸ்சில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி: அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Melmaruvathur temple ,Arcot ,Vaniyambadi ,Tirupattur district ,Udayendram Venkatapuram ,
× RELATED மின் கம்பி மீது உரசிய பேருந்து: மின்சாரம் தாக்கி பெண் பலி