×

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: சென்னை-திருச்சி இடையே போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால், சென்னை – திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள், அவர்களின் சொந்த ஊர்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் சொந்த ஊர்களுக்கு கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல துவங்கிவிட்டனர். இதனால், செங்கல்பட்டு அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அருகே இருங்குன்றப்பள்ளி பகுதியின் பாலாற்று பாலத்தில் சாலைகள் பழுதடைந்து ஆங்காங்கே பள்ளம் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் மிகவும் மெதுவாக செல்ல வேண்டிய நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மீறி ஏராளமான வாகனங்களின் வருகையால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. பாலாற்று பாலம் முதல் பழவேலி வரை சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் உரிய நேரத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியவில்லை.

The post கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: சென்னை-திருச்சி இடையே போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Christmas ,Chennai-Trichy ,Chennai ,Trichy ,
× RELATED அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு