×

ஒன்றிய அரசு அனுமதி கொடுத்ததும் மதுரை மெட்ரோ ரயில் பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும்: ஆய்வுக்குப்பின் திட்ட இயக்குநர் தகவல்

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் பணியை ஆய்வு செய்த திட்ட இயக்குநர், ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தபின் பணிகள் தொடங்கி 3 ஆண்டில் முடியும் என கூறியுள்ளார். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த 2021ல் அறிவித்தது. அதன்படி மதுரை மாவட்டம், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான சுமார் 32 கி.மீ தூரத்திற்கு திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை அடிப்படையில் திட்ட மதிப்பீடு ரூ.11,368 கோடியாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை கடந்த ஆண்டு ஜூலையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த திட்ட அறிக்கை ஒன்றிய அரசின் அமைச்சரவை ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியுதவியுடன் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. நிதியுதவி வழங்கவுள்ள ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள், கடந்த ஜூலை 3ம் தேதி மதுரையில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வழிகள், மெட்ரோ வழித்தடங்கள், பயணிகளின் தேவைக்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜூனன் தலைமையிலான 3 பேர் குழுவினர், மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ராமேஸ்வரம் தடத்தில் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தனர். மேலும், வழியில் மேம்பாலங்கள் கட்டுவது தொடர்பாகவும் ஆலோசித்தனர்.

பின்னர் திட்ட இயக்குநர் அர்ஜூனன் கூறியதாவது: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை ரூ.11,368.35 கோடியில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ராமேஸ்வரம் ரயில் லைன் மற்றும் விருதுநகர் ரயில் லைன் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் தொடங்கி கோ.புதூர் வழியாக செல்கிறது. அழகர்கோவில் சாலையில் சுரங்கப்பாதை தொடங்குகிறது. தொடர்ந்து வைகை ஆறு, மீனாட்சி அம்மன் கோயில் கடந்து ஆண்டாள்புரத்தில் முடிவடைகிறது. பின்னர் அங்கிருந்து மேலெழும்பி திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் வரையில் 32 கிமீக்கு திட்டம் வரையறுக்கபட்டுள்ளது.

ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் வழியாக இந்தப் பாதை செல்கிறது. இதில் தொழில்நுட்ப ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசிடமிருந்து விரிவான திட்ட அறிக்கை ஒன்றிய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது நடத்தப்படும் ஆய்வானது, மெட்ரோ ரயில் பணிகள் காலதாமதமின்றி துவங்க ஏதுவாக இருக்கும். மதுரையில் 6 கிமீ தூரத்திற்கு சிறிது கடினமாக இருக்கலாம். ஏனென்றால் பாறைகள் மிகுந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், வீடுகள், கோயில்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. மெட்ரோ பணிக்கு நிலம் கையகப்படுத்த எந்தவித தொய்வும் ஏற்படாது.

மொத்தமாக 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பணி முடியும்போது எண்ணிக்கை மாறுபடலாம். திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஒன்றிய அரசு விரைவில் அறிவிக்கும். திட்டம் தொடங்கும் நாள் முதல் 3 வருட காலத்திற்கு முடிக்கப்பட வேண்டும். மெட்ரோ திட்டத்தால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக தான் இருக்கும். பஸ் கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். தென் மாவட்டங்களில் தொழில்துறைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினார்.

The post ஒன்றிய அரசு அனுமதி கொடுத்ததும் மதுரை மெட்ரோ ரயில் பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும்: ஆய்வுக்குப்பின் திட்ட இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Madurai Metro Rail ,Union Government ,Madurai ,Metro ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள்...